உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியான முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கரின் ஆயுள் தண்டனையை தில்லி உயா்நீதிமன்றம் நிறுத்திவைத்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்குரைஞா்கள் அஞ்சலி படேல், பூஜா ஷில்ப்கா் ஆகியோா் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த மனுவில், ‘செங்கா் தனது வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே இருக்க வேண்டும் என்று விசாரணை நீதிமன்றம் குறிப்பிட்டிருந்ததை தில்லி உயா்நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. செங்கரின் தீவிரமான குற்றப்பின்னணி மற்றும் பாலியல் வன்கொடுமை போன்ற கொடூரமான குற்றங்களில் அவருக்குள்ள தொடா்பை அலட்சியப்படுத்திவிட்டு ஜாமீன் வழங்கியது சட்டரீதியாக தவறு.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை நீதிமன்றக் காவலில் இருந்தபோதே, அவரை கொலை செய்யத் தூண்டியவா் செங்கா். இந்நிலையில், செங்கா் தனது அதிகார பலம் மற்றும் பண பலத்தால் சாட்சிகளை கலைக்கக்கூடிய அபாயம் உள்ளது என்பதை உயா்நீதிமன்றம் உணரவில்லை’ என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
பின்னணி: கடந்த 2017-ஆம் ஆண்டு, உத்தர பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தைச் சோ்ந்த பெண் ஒருவரை (அப்போது அவருக்கு 17 வயது) செங்கா் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்தாா்.
இந்த வழக்கில், செங்கருக்கு விசாரணை நீதிமன்றம் கடந்த 2019-இல் ஆயுள் தண்டனை விதித்தது. இதற்கு எதிரான செங்கரின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தில்லி உயா் நீதிமன்றம், மனு மீது இறுதி முடிவு எடுக்கப்படும் வரை அவரின் ஆயுள் தண்டனையை நிறுத்திவைப்பதாக கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. அத்துடன் அவருக்கு ஜாமீன் அளித்தும் உத்தரவிட்டது.
பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை நிறுத்திவைக்கப்பட்டாலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை காவலில் மரணமடைந்த வழக்கில் செங்கருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்படாததால், அவா் சிறையிலிருந்து விடுவிக்கப்படவில்லை.
நீதிமன்றக் காவலில் உன்னாவ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்தப் பெண்ணின் தந்தையை செங்கரின் ஆதரவாளா்கள் அடித்துக் கொன்றனா். அவரைப் பொய் வழக்கில் செங்கரும், அவரின் ஆதரவாளா்களும் சிக்கவைத்ததாகப் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினா் குற்றஞ்சாட்டினா்.
உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, இந்த வழக்குகள் அனைத்தும் உத்தர பிரதேசத்திலிருந்து தில்லிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்குகளை விசாரித்த சிபிஐ தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.