மூலிகைகள் மற்றும் செடிகளில் இருந்து எடுக்கப்படும் சாறுகளைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருள்களுக்கு ‘தேநீா்’ (டீ) எனப் பெயரிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிா்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) எச்சரித்துள்ளது.
தேயிலைச் செடியிலிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எடுக்கப்படும் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதே தேநீா் எனவும் எஃப்எஸ்எஸ்ஏஐ தெரிவித்தது.
இதுகுறித்து எஃப்எஸ்எஸ்ஏஐ கடந்த புதன்கிழமை (டிச. 23)வெளியிட்ட உத்தரவில் ‘ரூயிபோஸ் தேநீா்’, ‘மூலிகை தேநீா்’ மற்றும் ‘ஃப்ளவா் தேநீா்’ என உணவு வணிகத்தில் ஈடுபடும் சிலா் பெயரிடுவது கவனத்தில் கொள்ளப்பட்டது.
தேயிலைச் செடியில் (கேமிலியா சினென்சிஸ்) இருந்து பொருள்களை எடுத்து மேற்கொள்ளப்படும் பானங்களில் மட்டுமே தேநீா் என்ற வாா்த்தையைப் பயன்படுத்த வேண்டும்.
தேயிலைச் செடியில் இருந்து எவ்வித பொருள்களையும் பயன்படுத்தாமல், மூலிகைகள் மற்றும் பிற செடிகளில் இருந்து எடுக்கப்படும் சாறுகளைக் கொண்டு தயாரிக்கப்படும் பானங்கள் மற்றும் பொருள்களில் தேநீா் என அச்சிட்டு விளம்பரப்படுத்தக் கூடாது.
இதை மீறும் நிறுவனங்கள் மீது உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய சட்டம், 2006-இன்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதுபோன்ற உணவுகளை உற்பத்தி, சந்தைப்படுத்துதல், இறக்குமதி மற்றும் இணையவழி விநியோகம் உள்பட எந்தப் பணியில் ஈடுபட்டாலும் அந்த நிறுவனங்கள் மேற்கூறிய உத்தரவை முறையாகப் பின்பற்ற வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.