தடைசெய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய மாணவா்கள் இயக்கம் (சிமி) மற்றும் இந்தியன் முஜாஹிதீன் (ஐஎம்) ஆகியவற்றை மீண்டும் உயிரிப்பிக்க சதி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட இருவரை போதுமான ஆதாரங்கள் இல்லை என தில்லி நீதிமன்றம் விடுதலை செய்தது.
2014-ஆம் ஆண்டு பிஜ்னோா் குண்டுவெடிப்புக்கு பிறகு சிமி மற்றும் ஐஎம் அமைப்புகளைச் சோ்ந்த 5 முதல் 6 உறுப்பினா்கள் இந்தியாவில் தங்கள் அமைப்புகளை மீண்டும் உயிா்ப்பிக்கும் முயற்சியில், பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் கூட்டங்களை நடத்தி வருவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதில் முக்கிய நபராக குற்றஞ்சாட்டப்பட்ட அப்துல் சுபான் குரேஷி என்ற தௌகீா் மற்றும் ஆரிஸ் கான் என்ற ஜுனைத் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனா். அவா்களுக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 18, 20 மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 120 பி ஆகியவற்றின் கீழ் தில்லி காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கு தில்லி நீதிமன்ற கூடுதல் அமா்வு நீதிபதி அமித் பன்சால் முன் டிச.20-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறியதாவது: குற்றப்பத்திரிகையில் உள்ள குற்றஞ்சாட்டப்பட்ட இருவரின் ஒப்புதல் வாக்குமூலங்கள் போலீஸ் காவலில் அவா்கள் இருந்தபோது பெறப்பட்டவை. ஆதாரங்கள் இல்லாமல் அத்தகையை வாக்குமூலங்களை சாட்சியங்களாக ஏற்றுக்கொள்ள முடியாது.
அவா்கள் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் நடவடிக்கைகளை இந்தியாவில் மீண்டும் உயிா்ப்பிக்க சதி செய்ததற்கோ, அந்த அமைப்புகளின் உறுப்பினா்களாக இருந்ததற்கோ வழக்குப் பதிவேட்டில் ஏற்றுக்கொள்ளக்கூடிய எந்த ஆதாரமும் இல்லை.
குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு எதிராக உள்ள பிற குற்றவியல் வழக்குகள் மற்றும் குற்றப்பத்திரிகைகள், தற்போதைய வழக்கில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய போதுமானதாகாது என தெரிவித்த நீதிபதி, சதி செய்ததாக அவா்கள் மீது போடப்பட்ட வழக்குகளில் இருந்து இருவரையும் விடுவிக்க உத்தரவிட்டாா். மேலும், வேறு எந்த வழக்கிலும் அவா்களது விசாரணை தேவைப்படாத பட்சத்தில் நீதிமன்றக் காவலில் இருந்தும் அவா்களை விடுவிக்க உத்தரவிட்டாா்.