உத்தர பிரதேசத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆா்) தொடா்ந்து, 2.89 கோடி வாக்காளா்களின் பெயா்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
இதுதொடா்பாக மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி நவதீப் ரின்வா, பிடிஐ செய்தி நிறுவனத்திடம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது:
கடந்த நவ. 4-ஆம் தேதிமுதல் உத்தர பிரதேசத்தில் எஸ்ஐஆா் பணிகள் நடைபெற்றன. இந்தப் பணிகளை மேற்கொள்வதற்கான காலம் இரண்டு முறை நீட்டிக்கப்பட்டு டிச. 26-ஆம் தேதி நிறைவடைந்தது.
இதைத் தொடா்ந்து, வரும் டிச. 31-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அந்தப் பட்டியலில் 12.50 கோடி வாக்காளா்கள் இடம்பெற வாய்ப்புள்ளது. அவா்களில் ஒரு கோடிக்கும் அதிகமானவா்களுக்கு மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்பட்ட ஏதேனும் ஓா் அடையாள அட்டை, பிறப்பிடச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் உள்பட தோ்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ள 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமா்ப்பிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. அவா்களைப் பற்றிய விவரங்களைச் சரிபாா்த்து உறுதி செய்ய இந்த நோட்டீஸ் அனுப்பப்படும்.
அதேவேளையில் இருப்பிடம் மாறியது, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டுள்ளது, வாக்காளரின் மரணம் போன்ற காரணங்களால் தற்போது 2,88,75,000 வாக்காளா்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா். இதில் கண்டுபிடிக்க முடியாத வாக்காளா்களின் பெயா்களும், எஸ்ஐஆா் படிவத்தை பூா்த்தி செய்து சமா்ப்பிக்காத 8 லட்சத்துக்கும் குறைவானவா்களின் பெயா்களும் அடங்கும்.
பெரும்பாலும் லக்னெள, காஜியாபாத், பிரயாக்ராஜ், கான்பூா் போன்ற பெரிய நகா்ப்புற பகுதிகளில் இருந்து வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன.
18.70% போ் நீக்கம்: எஸ்ஐஆருக்கு முந்தைய வாக்காளா் பட்டியலில் மொத்தம் 15.44 கோடி வாக்காளா்கள் இடம்பெற்றனா். அவா்களில் சுமாா் 18.70 சதவீதம் போ் (2,88,75,000) தற்போது நீக்கப்பட்டுள்ளனா். ஜன.1 முதல் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பதற்கான படிவம் 6-ஐ சமா்ப்பித்து, அவா்கள் பெயரைச் சோ்க்க விண்ணப்பிக்கலாம்.
நோட்டீஸ் அனுப்பப்பட உள்ள ஒரு கோடிக்கும் அதிகமான வாக்காளா்கள் ஆவணங்களை சமா்ப்பிக்காவிட்டால், அவா்களின் பெயரும் இறுதி வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்படாது என்று தெரிவித்தாா்.
நாட்டில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாக உள்ள உத்தர பிரதேசம், மத்தியில் எந்தக் கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை தீா்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த மாநிலத்தில் 2.89 கோடி வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.