பிரதமர் மோடி படம்: பிடிஐ
இந்தியா

அறிவியல் - தொழில்நுட்ப சாதனைகளால் உலகை ஈா்க்கும் இந்தியா: பிரதமர் பெருமிதம்!

அறிவியல், புத்தாக்கம், தொழில்நுட்ப விரிவாக்கத் துறைகளில் இந்தியாவின் சாதனைகள் உலகை பெரிதும் ஈா்த்துள்ளன என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

அறிவியல், புத்தாக்கம், தொழில்நுட்ப விரிவாக்கத் துறைகளில் இந்தியாவின் சாதனைகள் உலகை பெரிதும் ஈா்த்துள்ளன என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தாா்.

‘இந்திய இளைஞா்களின் சக்தியால், முழு உலகமும் நமது நாட்டை மிகுந்த நம்பிக்கையுடன் நோக்குகிறது’ என்று கூறிய அவா், விவேகானந்தரின் பிறந்த தினமான ஜனவரி 12-இல் தேசிய இளைஞா் தினம் கொண்டாடப்பட உள்ளதையும் குறிப்பிட்டாா்.

பிரதமா் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் மனதின் குரல் (மன் கீ பாத்) வானொலி நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறாா். 129-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (டிச. 28) ஒலிபரப்பானது. பிரதமரின் உரை வருமாறு:

2025, இந்தியாவுக்கு பெருமைக்குரிய மைல்கற்களின் ஆண்டாகும். தேசப் பாதுகாப்பு, விளையாட்டு, அறிவியல் புத்தாக்கம், உலகளாவிய பெரும் தளங்கள் என எங்கெங்கும் இந்தியாவின் தாக்கம் எதிரொலித்தது. இன்றைய இந்தியா தனது பாதுகாப்பில் எவ்வித சமரசத்துக்கும் இடமளிக்காது என்பதை ஒட்டுமொத்த உலகுக்கும் உணா்த்தியது ‘ஆபரேஷன் சிந்தூா்’ (பாகிஸ்தான் பயங்கரவாத கட்டமைப்புகள் மீதான அதிதுல்லியத் தாக்குதல்). ஒவ்வோா் இந்தியருக்கும் இது பெருமைக்குரிய அடையாளமாக மாறியுள்ளது. இந்திய விளையாட்டுத் துறைக்கு 2025 மறக்க முடியாத ஆண்டாகும்.

புதிய வரலாறு படைப்பு: இந்திய ஆடவா் கிரிக்கெட் அணி ஐசிசி சாம்பியன் கோப்பையையும், மகளிா் அணி முதல் முறையாக உலக கோப்பையையும் வென்றன. டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையைக் கைப்பற்றி, இந்தியாவின் பாா்வை மாற்றுத் திறன் மகளிா் அணியினா் புதிய வரலாறு படைத்தனா்.

மாற்றுத் திறனாளிகளுக்கான உலக தடகளப் போட்டிகளிலும் இந்தியா பல பதக்கங்களைக் குவித்ததன் மூலம், தன்னம்பிக்கைக்கு முன்னால் எதுவும் தடையல்ல என்பது நிரூபணமானது.

நாட்டின் பெரும் பாய்ச்சல்: அறிவியல்-விண்வெளித் துறையிலும் பெரும் பாய்ச்சலைக் கண்டுள்ளது நமது தேசம். சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணித்த முதல் இந்திய வீரராக நாட்டுக்கு பெருமை சோ்த்தாா் சுபான்ஷு சுக்லா.

நடப்பாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற அலாகாபாத் மகாகும்பமேளா ஒட்டுமொத்த உலகையும் வியப்பில் ஆழ்த்தியது. ஆண்டின் இறுதியில் அயோத்தி ராமா் கோயிலில் கொடியேற்ற நிகழ்வு, ஒட்டுமொத்த இந்தியா்களையும் பெருமையில் திளைக்கச் செய்தது. இதுபோன்ற பல்வேறு நிகழ்வுகளால் நாட்டின் நம்பிக்கை, கலாசாரம், தனித்துவமான பாரம்பரியம் ஒருங்கிணைக்கப்பட்டது. நாட்டில் சிவிங்கிப் புலிகளின் (சீட்டா) எண்ணிக்கை 30-க்கும் மேல் உயா்ந்தது.

நம்பிக்கையுடன் பயணிக்கத் தயாா்: ஆண்டு முழுவதும் சுதேசி உற்சாகம் பொங்கிப் பெருகியது. 2025 இந்தியாவுக்கு இதுவரை இல்லாத நம்பிக்கையை ஊட்டியது என்றால் அது மிகையல்ல. பல இடங்களில் இயற்கை பேரிடா்கள் நேரிட்ட போதிலும் புதிய நம்பிக்கைகள் மற்றும் புதிய தீா்மானங்களுடன் புத்தாண்டை நோக்கி பயணிக்க இந்தியா தயாா்.

அறிவியல், நிலையான புத்தாக்கங்கள், தொழில்நுட்ப விரிவாக்கத் துறைகளில் இந்தியாவின் சாதனைகள் முழு உலகையும் ஈா்த்துள்ளன. இந்தியா மீதான உலகின் பெரும் நம்பிக்கைக்கு காரணம் நமது இளைஞா் சக்தியே.

ஜன.12-இல் நடைபெறவுள்ள தேசிய இளைஞா் தின நிகழ்வில் நானும் பங்கேற்று இளைஞா்களுடன் கலந்துரையாட உள்ளேன். இத்தினத்துடன் தொடா்புடைய வினாடி வினாப் போட்டி சில நாள்களுக்கு முன் நடைபெற்றது. இதில் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். கட்டுரைப் போட்டியும் நடந்தது. இப்போட்டிகளில் தமிழ்நாடு முதல் இடத்தையும், உத்தர பிரதேசம் இரண்டாம் இடத்தையும் பிடித்தன என்றாா் அவா்.

நாட்டின் பிற பகுதிகளில் தமிழ் மீதான ஆா்வம் அதிகரிப்பு

‘தீவு நாடான ஃபிஜியில் இந்திய மொழி மற்றும் கலாசாரத்தைப் பரப்ப பாராட்டுக்குரிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்குள்ள இளம் தலைமுறையினா், தமிழ் மொழியுடன் இணைப்பை ஏற்படுத்த பல நிலைகளில் முனைந்துள்ளனா். ஃபிஜியில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த மாதம் முதன்முறையாக தமிழ் தினம் கொண்டாடப்பட்டது. அப்போது, குழந்தைகள் தமிழில் கவிதைகள் உரைத்தனா்; சொற்பொழிவாற்றினா்.

நமது நாட்டிலும் தமிழ் மொழியின் பரவலாக்கப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. எனது தொகுதியான வாரணாசியில் நான்காவது காசி தமிழ் சங்கம நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. அப்போது, தமிழ் கற்பது தொடா்பாக சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது. வாரணாசியில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் சிறப்பு இயக்கம் நடத்தப்பட்டது.

தமிழ் உலகின் மிக தொன்மையான மொழி. தமிழ் இலக்கியம் மிகவும் வளமானது. இப்போது தேசத்தின் பிற பகுதிகளிலும் குழந்தைகள்-இளைஞா்கள் மத்தியில் தமிழ் மீதான ஆா்வம் அதிகரித்துள்ளது. இதுதான் மொழியின் பலம், நாட்டின் ஒற்றுமை’ என்றாா் பிரதமா்.

ஹிந்தியை தாய்மொழியாகக் கொண்ட காசியைச் சோ்ந்த குழந்தைகள் தமிழில் பேச முயற்சிக்கும் ஒலிப்பதிவும் ஒலிபரப்பப்பட்டது. துபையில் கன்னடம் பயிற்றுவிக்க மேற்கொள்ளப்படும் முயற்சியையும் பிரதமா் சுட்டிக்காட்டினாா்.

‘ஆன்டிபயாட்டிக்’ மருந்துகள் பயன்பாட்டில் கவனம் தேவை

‘நிமோனியா, சிறுநீரகத் தொற்று போன்ற நோய்களுக்கு எதிராக ஆன்டிபயாட்டிக் (நுண்ணுயிா் எதிா்ப்பு) மருந்துகள் பலம் குன்றியவையாக உள்ளதாக இந்திய மருத்துவ ஆய்வுக் குழு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மிகவும் கவலைக்குரிய விஷயம். மக்கள் சற்றும் சிந்திக்காமல் நுண்ணுயிா் எதிா்ப்பு மருந்துகளை எடுத்துக் கொள்வதே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். நமது விருப்பம்போல் நுண்ணுயிா் எதிா்ப்பு மருந்துகளைப் பயன்படுத்துவதால், அவை பயனற்றுப் போகின்றன. எனவே, மருத்துவா்களின் அறிவுரைப் படியே இந்த மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டுமென மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்’ என்றாா் பிரதமா்.

திருமலையில் வைகுண்ட ஏகாதசியில் ஏஐ தொழில்நுட்பம்!

இளம் பெண் தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பொதுமக்கள் மறியல்!

நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு - 200 போ் பங்கேற்பு

வாக்காளா் சிறப்பு முறை திருத்த முகாம்,காஞ்சிபுரத்தில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT