புதௌன்: உத்தரப்பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தில் நடந்த இறுதிச் சடங்கின்போது பரிமாறப்பட்ட தயிர் பச்சடி சாப்பிட்டவர்கள், தங்களுக்கு ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் அரசு மருத்துவமனைக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரைந்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இறுதிச் சடங்கில் பரிமாறப்பட்ட தயிர் பச்சடி, மாட்டுப் பாலில் தயாரிக்கப்பட்டுள்ளது. பால் கறக்கப்பட்டு ஒரு நாளைக்குப் பிறகு, அந்த மாடு திடீரென இறந்துவிட்டது. அதற்கு ஓரிரு நாள்கள் முன்புதான், மாட்டை நாய் கடித்திருந்தததால் ரேபிஸ் தொற்றினால் மாடு இறந்திருக்கக் கூடும் என்ற தகவல் பரவிய நிலையில், தயிர் பச்சடி சாப்பிட்டவர்களுக்கும் ரேபிஸ் தொற்று ஏற்படுமோ என்ற பயம் தொற்றிக் கொண்டது.
டிச.23ஆம் தேதி இறுதிச் சடங்கு நடந்துள்ளது. அப்போது உறவினர்களுக்கு பரிமாறப்பட்ட உணவில், தயிர் பச்சடியும் இடம்பெற்றிருந்தது.
பிறகுதான், தயிர் பச்சடி செய்யப் பயன்படுத்தப்பட்ட பால் கறக்கப்பட்ட மாடு, அதற்கு ஒரு சில நாள்களுக்கு முன்பு நாய்க்கடியால் பாதிக்கப்பட்டிருந்ததும், டிச. 26ஆம் தேதி மாடு திடீரென உயிரிழந்துவிட்டதும் தெரிய வந்தது.
இதனால், அப்பகுதி மக்கள், மாடு ரேபிஸ் தாக்கி பலியாகியிருக்கலாம், எனவே, தங்களுக்கும் ரேபிஸ் தாக்கும் என்ற அச்சத்தில் மருத்துவமனைகளில் குவிந்துள்ளனர். அனைவரும் ரேபிஸ் தடுப்பூசியை செலுத்தி வருகிறார்கள்.
இது குறித்து தகவல் அறிந்த சுகாதாரத் துறையினர், முன்னெச்சரிக்கையாக அனைவரும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வது நல்லதுதான். ஆனால், காய்ச்சிய பாலில்தான் தயிர் தயாரிக்கப்பட்டிருக்கும் என்பதால் ரேபிஸ் தொற்று பரவும் வாய்ப்பு குறைவு என்றும், மாடு இறப்பதற்கு முன்பு, ரேபிஸ் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்துள்ளதையும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.
சம்பந்தப்பட்ட கிராமத்தின் அரசு மருத்துவமனையில் போதிய ரேபிஸ் தடுப்பூசிகள் இருப்பு வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கிராம மக்கள் புரளி மற்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தடுப்பூசி செலுத்தியவர்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.