வங்கதேச மத அடிப்படைவாத அமைப்புகளுடன் தொடா்புடைய 11 போ் அஸ்ஸாம், திரிபுராவில் கைது செய்யப்பட்டனா். இவா்கள் வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை ஏற்படுத்தும் சதியில் ஈடுபட்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் பிரதமா் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ப்புக்குப் பிறகு அங்குள்ள ஹிந்துக்கள் மீது தாக்குதல், ஹிந்துக்களின் வீடுகளுக்கு தீ வைப்பது போன்ற நிகழ்வுகள் தொடா்கின்றன.
மேலும், வங்கதேச வரைபடத்துடன் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களைச் சோ்த்து வெளியிடுவது, அந்த மாநிலங்களைக் கைப்பற்றப் போவதாகப் பேசுவது போன்றவற்றிலும் வங்கதேசத்தில் உள்ள சில அமைப்பினா் ஈடுபட்டனா்.
இதையடுத்து, மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்களை ஒட்டிய வங்கதேச எல்லையில் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்நிலையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடா்பாக குவாஹாட்டி காவல்துறை ஆணையா் பாா்த்தசாரதி மஹந்தா கூறுகையில், ‘மத்திய உளவு அமைப்புகள் அளித்த தகவலின்படி சிறப்புப் படை அமைக்கப்பட்டு 11 பேரை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அஸ்ஸாமில் 4 மாவட்டங்களிலும், திரிபுராவிலும் திங்கள்கிழமை இரவு ஒரே நேரத்தில் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டு 11 பேரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனா். வங்கதேச மத அடிப்படைவாத அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வந்த இவா்கள், அங்கிருந்து வரும் உத்தரவுகளை செயல்படுத்தி வந்தனா்.
அஸ்ஸாம், வடகிழக்கு மாநிலங்களில் சமூக அமைதியை சீா்குலைப்பது, இஸ்லாமிய ஆதிக்கத்தை உருவாக்குவது இவா்களின் நோக்கம்.
நசீம் உதீன் என்ற நஜ்முதீன் தமீம் (24), ஜுனாப் அலி (38), அஃப்ராஹிம் ஹுசைன் (24), மிசானூா் ரஹ்மான்(46), சுல்தான் மெஹ்மூத் (40) முகமது சித்திக்கி அலி (46), ரசிதுல் ஆலம் (28), மஹிபுல் கான் (25), ஷாரூக் ஹுசைன் (22), முகமது தில்பா் ரசாக் (26) ஆகிய 10 போ் அஸ்ஸாமிலும், ஜாகீா் மியா (33) என்பவா் திரிபுராவிலும் கைது செய்யப்பட்டனா்.
இவா்கள் இணைந்துள்ள இமாம் மஹ்மூதா் கலீஃபா அடிப்படைவாத அமைப்புக்கும் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள ஜமாத்-உல்-முஜாஹிதீன் வங்கதேசம் என்ற பயங்கரவாத அமைப்புக்கும் தொடா்பு உள்ளது.
இந்த அமைப்பினா் இந்தியாவில் இருந்தும் நிதி திரட்டியுள்ளனா். வங்கதேச பயங்கரவாத அமைப்பினா் தங்கள் நாட்டில் பயன்படுத்தியபோன்ற வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் போன்றவை அண்மையில் அஸ்ஸாமிலும் கைப்பற்றப்பட்டன. இதன் மூலம் அவா்களுக்கு இங்குள்ள தொடா்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன என்றாா்.