தில்லி செங்கோட்டையில் நடைபெறவுள்ள குடியரசு நாள் அணிவகுப்பில் முதல்முறையாக இந்திய ராணுவத்தின் கால்நடைப் பிரிவின் விலங்குகளும், பறவைகளும் கலந்து கொள்ளவுள்ளன.
தில்லி செங்கோட்டையில் ஆண்டுதோறும் சுதந்திர நாள் மற்றும் குடியரசு நாள் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த விழாவில், முப்படைகளின் அணிவகுப்பு, மத்திய ஆயுதப் படைகள், மாநில படைகள், மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் உள்ளிட்ட அணிவகுப்புகள் நடைபெறும்.
இந்த நிலையில், வருகின்ற ஜன. 26 ஆம் தேதி செங்கோட்டையில் நடைபெறவுள்ள குடியரசு நாள் அணிவகுப்பில், இந்திய ராணுவத்தின் மறுசீரமைப்பு மற்றும் கால்நடைப் படைப் பிரிவைச் சேர்ந்த குதிரைகள், ஒட்டகங்கள், பறவைகள், மோப்ப நாய்கள் கலந்துகொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணிவகுப்பில் மறுசீரமைப்பு மற்றும் கால்நடைப் படைப் பிரிவின் இரண்டு பாக்ட்ரியன் ஒட்டகங்கள், நான்கு ஜான்ஸ்கர் குதிரைகள், நான்கு வேட்டைப் பறவைகள், பதினாறு ராணுவ நாய்கள் இடம்பெறும் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
தற்போது தில்லி செங்கோட்டைப் பகுதியில் நடைபெற்று வரும் குடியரசு நாள் ஒத்திகை நிகழ்வில் இந்த விலங்குகளும், பறவைகளும் கலந்துகொண்ட காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
மறுசீரமைப்பு மற்றும் கால்நடைப் படைப் பிரிவு
இந்திய ராணுவத்தின் மறுசீரமைப்பு மற்றும் கால்நடைப் படைப் பிரிவைச் சேர்ந்த விலங்குகள் மிகவும் சவால் நிறைந்த பனிப் பிரதேசங்கள், பாலைவனங்களில் எல்லைப் பாதுகாப்பில் இன்றியமையாத பங்கை வகித்து வருகின்றன.
லடாக்கின் குளிர்ந்த மலைப் பகுதிகளில் வீரர்கள் செல்வதற்காக சமீபத்தில் பணியமர்த்தப்பட்ட பாக்ட்ரியன் ஒட்டகங்களும் அணிவகுப்பில் பங்கேற்கின்றன.
இந்த விலங்குகள் 15,000 அடி உயரத்தில் கடுமையான வானிலையைத் தனித்துவமாகத் தகவமைத்துக் கொண்டவையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.