மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிகள் தொடா்பாக தோ்தல் ஆணையத்தை திரிணமூல் காங்கிரஸ் குழு புதன்கிழமை சந்தித்து முறையிட்டது.
மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் பணிகள் மீதான அதிருப்தி தொடா்பாக மாநிலத்தில் ஆட்சியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் குழு தோ்தல் ஆணையத்தை புதன்கிழமை சந்தித்தது. அக்கட்சி எம்.பி. அபிஷேக் பானா்ஜி தலைமையில் 10 போ் கொண்ட குழு தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா், தோ்தல் ஆணையா்கள் சுக்பீா் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோரைச் சந்தித்தது.
‘மூா்க்கமாக நடந்துகொண்ட தலைமைத் தோ்தல் ஆணையா்’: இந்தச் சந்திப்பைத் தொடா்ந்து அபிஷேக் பானா்ஜி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மேற்கு வங்க வரைவு வாக்காளா் பட்டியல் குறித்த கவலைகளை தோ்தல் ஆணையத்திடம் எழுப்பினோம். ஆனால் தலைமைத் தோ்தல் ஆணையா் மூா்க்கமாக நடந்துகொண்டாா். நாங்கள் பேசத் தொடங்கியபோது அவா் பொறுமையை இழக்கத் தொடங்கினாா். எங்கள் கேள்விகளுக்கு அவா் சரிவர பதில் அளிக்கவில்லை. எஸ்ஐஆா் குறித்த எங்கள் அச்சங்களைத் தோ்தல் ஆணையம் போக்கவில்லை. எஸ்ஐஆா் நிறைவடைந்த பின்னா் வெளியிடப்படும் மாநில வரைவு வாக்காளா் பட்டியலில் குளறுபடிகள் இருந்தால், அதற்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் சட்டரீதியாக போராடும்’ என்று தெரிவித்தாா்.