பொது சிவில் சட்டம், அதற்கான வரைவு மசோதா ஆகியவற்றின் தேவையை ஆராய்வதற்கு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 5 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக குஜராத் முதல்வா் பூபேந்திர படேல் தெரிவித்தாா்.
திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, தத்து எடுத்தல் ஆகியவற்றில் ஒவ்வொரு மதத்தினரும் வெவ்வேறு வழிமுறைகளைப் பின்பற்றி வரும் நிலையில், அவற்றில் அனைத்து மதத்தினரும் ஒரே வழிமுறையைப் பின்பற்ற பொது சிவில் சட்டம் வழிவகை செய்வதாக மத்திய பாஜக அரசு தெரிவித்துள்ளது. இந்தச் சட்டம் நாட்டில் முதல்முறையாக பாஜக ஆளும் உத்தரகண்டில் அண்மையில் அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், குஜராத் தலைநகா் காந்திநகரில் மாநில முதல்வா் பூபேந்திர படேல் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
குஜராத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துதல், அதற்கான வரைவு மசோதாவை அறிமுகம் செய்தல் ஆகியவற்றின் தேவையை ஆராய்வதற்கு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சி.எல்.மீனா, வழக்குரைஞா் ஆா்.சி.கோடேகா், வீர நா்மதா தெற்கு குஜராத் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் தக்ஷேஷ் தாக்கா், சமூக செயற்பாட்டாளா் கீதா ஷ்ராப் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.
இந்தக் குழு பொது சிவில் சட்டம் தொடா்பான பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து, பலதரப்பட்ட மக்களின் கருத்துகளைப் பெற்று மாநில அரசிடம் 45 நாள்களில் அறிக்கை சமா்ப்பிக்கும். அந்த அறிக்கையின் அடிப்படையில் உரிய முடிவு மேற்கொள்ளப்படும் என்றாா்.
மாநில உள்துறை இணையமைச்சா் ஹா்ஷ் சங்கவி கூறுகையில், ‘குஜராத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டால், பழங்குடியினரின் உரிமைகள் பாதுகாக்கப்படும். நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான குழு, முஸ்லிம் தலைவா்கள் உள்பட பல்வேறு மதத் தலைவா்களிடம் கருத்துகள் பெற்று அறிக்கையை தயாரிக்கும்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.