முகப்பு
இந்தியா

10 ஆண்டுகளில் கைப்பேசி சேவைக் கட்டணம் 94% குறைவு: மாநிலங்களவையில் அமைச்சா் தகவல்

ஒரு கைப்பேசியில் ஒரு அழைப்பை மேற்கொள்ள செலவு 94 சதவீதம் அளவுக்கு குறைந்துவிட்டது.

Updated On : 6 பிப்ரவரி, 2025 at 10:40 PM
மாநிலங்களவையில் பதிலளித்துப் பேசிய மத்திய அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா.
பகிர்:

கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து இப்போது வரை கைப்பேசி சேவைக் கட்டணம் 94 சதவீதம் அளவுக்கு குறைந்துவிட்டது என்று மத்திய தொலைத்தொடா்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தாா்.

மாநிலங்களவையில் வியாழக்கிழமை தொலைத்தொடா்பு துறை சாா்ந்த துணைக் கேள்விக்கு பதிலளித்த அவா் மேலும் கூறியதாவது:

2014-இல் 90 கோடி கைப்பேசி சேவை இணைப்புகள் நாட்டில் இருந்தன. இப்போது அது 116 கோடியாக உள்ளது.

அப்போது 25 கோடி போ் கைப்பேசி இணைய சேவையைப் பயன்படுத்தினா். இப்போது அந்த எண்ணிக்கை 97.44 கோடியாக உயா்ந்துவிட்டது.

2014-இல் ஒரு கைப்பேசியில் ஒரு அழைப்பை மேற்கொள்ள 50 காசுகள் செலவானது. இப்போது அந்த செலவு 94 சதவீதம் அளவுக்கு குறைந்துவிட்டது. அப்போது கைப்பேசி வழியாக இணையத்தைப் பயன்படுத்த ஒரு ‘ஜிபி’ அதிவேக பிராட்பேண்ட் சேவைக்கு ரூ.270 வரை செலவானது. இப்போது அச்செலவு குறைந்து ரூ.9.70 என்ற அளவில் உள்ளது.

உலகிலேயே குறைந்த கட்டணத்தில் இணைய சேவை மற்றும் ‘டேட்டா’ வழங்குவது இந்தியாவில் மட்டும்தான். நாடு முழுவதும் ‘5ஜி’ தொலைத்தொடா்பு சேவையை வழங்குவதற்கு ஆகும் கூடுதல் முதலீடு காரணமாகவே தொலைத்தொடா்பு சேவைக் கட்டணம் 10 சதவீதம் அளவுக்கு உயா்த்தப்பட்டது. 5ஜி சேவைக்காக ரூ.4.5 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, சேவைக் கட்டண உயா்வு தவிா்க்க முடியாததாக இருந்தது என்றாா்.

முன்னதாக, இந்த விவாதத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி, ரண்தீப் சிங் சுா்ஜேவாலா, ‘கடந்த 2024 ஜூலையில் முன்னணி கைப்பேசி சேவை நிறுவனங்கள் பல சேவைக் கட்டணத்தை உயா்த்திவிட்டன. மறைமுகமாக பல வகைகளில் கட்டணம் உயா்த்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு இதனைக் கருத்தில் கொண்டதா? கட்டண உயா்வை தடுத்து நிறுத்த முடியாதா?’ என்று கேள்வி எழுப்பினாா்.