இந்தியாவிலிருந்து கனடாவுக்கு மாணவர்கள் விசாவில் சென்று, ஆனால் இதுவரை எந்த கல்லூரியிலும் சேராமல், 20000 மாணவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற தகவலே தெரியாமல் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் வெளியான தரவுகளின்படி, உயர்கல்விக்காக, இந்தியாவிலிருந்து கனடா சென்ற 20000 மாணவர்கள், எந்தக் கல்லூரியிலும் சேரவில்லை என்றும், அவர்களைப் பற்றிய எந்த தகவலும் அரசிடம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு காணாமல் போன மாணவர்களின் பின்னணி பற்றி வெளியாகும் தகவல்களில் பல மாணவர்கள் கனடாவில் உயர் கல்வி பயில சேர்ந்த கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்கள், கனடா சென்று பார்த்த பிறகுதான் அது போலியானவை என்றும், அவ்வாறு கல்லூரி அல்லது பல்கலையே இல்லை என்றும் தெரிய வந்திருக்கலாம்.
இதுபோன்ற மாணவர்கள் ஏதேனும் ஒரு சிறிய கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படித்துக்கொண்டிருக்கலாம் அல்லது கிடைத்த வேலையில் சேர்ந்து எப்படியோ கனடாவில் வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது பற்றி ஒரு சில மாணவர்கள் கூறுகையில், மிகப்பெரிய பல்கலைக்கழகத்தின் பெயரில், போலியான ஏஜெண்டுகள் மூலம் இந்திய மாணவர்கள் சேர்க்கைக்கான கடிதம் பெற்று கனடா வந்துவிடுகிறார்கள்.
பல லட்சம் கட்டி கனடா வந்து பார்த்தால், மோசடி செய்யும் ஒரு அலுவலகம் தான் இங்கே இருக்கும். அதனால், திரும்ப செல்ல முடியாமல், கிடைத்த வேலையைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள் என்கிறார்கள். சிலரோ, மாணவர்கள் விசா மூலம் கனடாவுக்குள் வந்துவிட்டு, சட்டவிரோதமாகத் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
இவ்வாறு கனடாவுக்கு வந்து காணாமல் போன மாணவர்கள், குஜராத், பஞ்சாப், ஹரியாணா, ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிர மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்களாம்.
இதில் மேலும் சிலர், அமெரிக்காவுக்குள் நுழைய கனடாவுக்கு மாணவர்கள் விசாவில் வந்தவர்களாக இருப்பார்கள் என்றும் அதில் பலரும் கனடாவிலேயே தங்கிவிடுவதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.