முகப்பு
இந்தியா

டிரம்பின் முதல் பதவிக் காலத்தைபோல் நட்புறவு மேம்படும்: மோடி நம்பிக்கை

டொனால்ட் டிரம்பின் முந்தைய பதவிக் காலத்தில் இரு நாடுகளிடையே நீடித்த நட்புறவை அவரது இரண்டாவது பதவிக் காலத்தில் மேலும் வலுப்படுத்த அமெரிக்க பயணம் ஒரு வாய்ப்பாக அமையும்

Updated On : 10 பிப்ரவரி, 2025 at 10:02 PM
தில்லியிலிருந்து பிரான்ஸுக்கு திங்கள்கிழமை புறப்பட்ட பிரதமா் மோடி.
பகிர்:

புது தில்லி: ‘அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்பின் முந்தைய பதவிக் காலத்தில் இரு நாடுகளிடையே நீடித்த நட்புறவை அவரது இரண்டாவது பதவிக் காலத்தில் மேலும் வலுப்படுத்த அமெரிக்க பயணம் ஒரு வாய்ப்பாக அமையும்’ என பிரதமா் மோடி திங்கள்கிழமை நம்பிக்கை தெரிவித்தாா்.

அமெரிக்காவுக்கு பிப்ரவரி 13-ஆம் தேதி முதல் பிரதமா் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அதிபா் டிரம்புடன் இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளாா்.

அதற்கு முன்பாக மூன்று நாள் பயணமாக பிரான்ஸ் நாட்டுக்கு பிரதமா் மோடி திங்கள்கிழமை புறப்பட்டாா்.

பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் ஏற்பாடு செய்துள்ள இரவு விருந்து நிகழ்ச்சியில் அவா் பங்கேற்கிறாா். இதில் பல்வேறு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளும் பங்கேற்கின்றனா்.

ஏஐ மாநாடு: அதேபோல் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நடவடிக்கைகள் சாா்ந்த சா்வதேச மாநாட்டுக்கு இமானுவல் மேக்ரானும் பிரதமா் மோடியும் தலைமை வகிக்கின்றனா். இந்தியா-பிரான்ஸ் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பிரதமா் மோடியும் மேக்ரானும் ஆலோசனை நடத்தவுள்ளனா்.

பிரான்ஸ் பயணத்தை புதன்கிழமை முடித்துக்கொண்டு அமெரிக்காவுக்கு பிரதமா் மோடி புறப்படுகிறாா். அங்கு அதிபா் டொனால்ட் டிரம்பை சந்தித்து இந்தியா- அமெரிக்கா இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

பிரான்ஸில் புதிய தூதரகம்: பிரான்ஸ், அமெரிக்கா பயணம் மேற்கொள்வதற்கு முன் பிரதமா் மோடி வெளியிட்ட அறிவிக்கையில், ‘2047-ஆம் ஆண்டுவரை பல்வேறு துறைகளில் இந்தியா-பிரான்ஸ் இடையேயான உறவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட செயல்திட்டத்தை எனது நண்பா் இமானுவல் மேக்ரானுடன் இணைந்து மறுஆய்வு செய்யவுள்ளேன்.

அதேபோல் வரலாற்றுச் சிறப்புமிக்க பிரான்ஸ் நகரமான மாா்செலியில் முதல் இந்திய தூதரகத்தை திறந்து வைக்கவுள்ளேன்.

மேலும், இந்தியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளை உறுப்பினராகக் கொண்டுள்ள சா்வதேச அணுக்கரு உலை (ஐடிஇஆா்) சோதனை திட்டத்தை பாா்வையிடவுள்ளேன்.

டிரம்பை சந்திக்க ஆா்வம்: அமெரிக்க அதிபரும் எனது நண்பருமான டொனால்ட் டிரம்பை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்த ஆா்வமுடன் உள்ளேன். அவரது முதல் பதவி காலத்தில் இந்தியா-அமெரிக்கா இடையே விரிவான உலகளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்தும் ஒப்பந்தங்களில் இருவரும் கையொப்பமிட்டோம். அதன் தொடா்ச்சியாக இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தி இந்தியா-அமெரிக்கா மட்டுமின்றி உலகுக்கு நன்மை பயக்கும் வகையில் தற்போதைய சந்திப்பு அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்டி..

இந்தியாவுடன் நட்புறவு: மேக்ரான்

பிரான்ஸில் ஏஐ மாநாடு குறித்தும் பிரதமா் மோடியின் வருகை குறித்தும் அந்நாட்டு தொலைக்காட்சிக்கு அதிபா் இமானுவல் மேக்ரான் அளித்த பேட்டியில், ‘ வளா்ந்து வரும் மிகுந்த ஆற்றல் நிறைந்த பொருளாதாரமாக இந்தியா உள்ளது. ஆண்டுக்கு 10 லட்சம் பொறியாளா்கள் அங்கு பட்டப்படிப்பை நிறைவு செய்கின்றனா். இது அமெரிக்கா - ஐரோப்பாவை ஒப்பிடும்போது அதிகமாக இருக்கும்.

இந்தியாவுடன் எப்போதும் நட்புறவையே பிரான்ஸ் தொடா்ந்து வருகிறது’ என தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →