மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்..!
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது பற்றி...
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் இதுகுறித்த அறிவிப்பாணையை இன்று(பிப். 13) மாலை வெளியிட்டுள்ளது.
முன்னதாக, பாஜக ஆளுங்கட்சியாக இருந்துவந்த மணிப்பூரில் முதல்வராக பதவி வகித்த பைரன் சிங் தனது பதவியை கடந்த 9-ஆம் தேதி ராஜிநாமா செய்தார். அதைத்தொடர்ந்து, புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்கப்படவிருந்த நிலையில், மணிப்பூரில் முழு நேர முதல்வர் இல்லாததால் ஆறு மாதங்களுக்குள் சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டும் என்ற காலக்கெடு நேற்றுடன்(பிப். 12) முடிவடைந்தது. அவ்வாறு சட்டப்பேரவை கூடினால் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவர காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த அசாதாரண சூழ்நிலையைத் தவிர்க்க குறிப்பிட்ட காலத்திற்கு குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகவும் அதன்படி, இன்றிலிருந்து மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறப்பித்துள்ள உத்தரவில், மணிப்பூர் ஆளுநரின் பரிந்துரையையேற்று இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளதாக அந்த அரசாணையில் குறிப்பிட்டுள்ளார்.