வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு அடுத்த மாதம் ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ரீதியிலான அரசு அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி மற்றும் குகி சமூகங்களுக்கு இடையே மாதக்கணக்கில் நடைபெற்ற மோதல்களில் 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து அந்த மாநிலத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அப்போது மாநில சட்டப் பேரவை முடக்கி வைக்கப்பட்டது.
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு அடுத்த மாதம் ஓராண்டு நிறைவடைய உள்ளது. இந்தச் சூழலில் அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நிறுவ மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 60 உறுப்பினர்களைக் கொண்ட அந்த மாநில சட்டப் பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2027) மார்ச் மாதம் முடிவடைய உள்ளது.
மணிப்பூர் அரசியல் நிலவரம் தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த மைத்தேயி மற்றும் குகி சமூக எம்எல்ஏக்களுடன் அக்கட்சியின் வடகிழக்கு பிராந்திய ஒருங்கிணைப்பாளரான சம்பித் பத்ரா சில சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார். இந்த இரு சமூகங்களையும் சேர்ந்த பாஜக எம்எல்ஏக்களை பாஜக தேசிய பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல்.சந்தோஷ், சம்பித் பத்ரா ஆகியோர் கடந்த ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதி சந்தித்துப் பேசினர்.
இந்தக் கூட்டத்தில் மணிப்பூர் சட்டப் பேரவை தலைவர் டி.சத்யப்ரத சிங் மற்றும் முன்னாள் முதல்வர் என்.பிரேன் சிங் உள்பட 30}க்கும் மேற்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பாஜகவைத் சேர்ந்த குகி சமூக எம்எல்ஏக்கள் 7 பேரில் நான்கு பேர் பங்கேற்றனர். தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த சமூகத்தைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில், மணிப்பூரில் சட்டப் பேரவை முடக்கத்தை நீக்கிவிட்டு ஜனநாயக அரசு அமைக்கப்படுமா என்பது குறித்து பாஜகவிடம் இருந்து கருத்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை. அடுத்த சில வாரங்களில் அங்கு ஜனநாயக அரசு அமைக்கப்படாத நிலையில், மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிப்பதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரின்போது கொண்டுவரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மணிப்பூரில் கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலின்போது பாஜகவைச் சேர்ந்த 32 பேர் வெற்றி பெற்றனர். ஐக்கிய ஜனதா தளம் 6 இடங்களில் வெற்றி பெற்றது. அவர்களில் 5 பேர் பின்னர் பாஜகவில் இணைந்துவிட்டனர். எனவே தற்போது பாஜகவுக்கு 37 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
இவர்களைத் தவிர, தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த 6 பேரும், நாகா மக்கள் முன்னணியைச் சேர்ந்த 5 பேரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 5 பேரும், குகி மக்கள் கூட்டணியைச் சேர்ந்த இருவரும், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த ஒருவரும், சுயேச்சைகள் மூவரும் எம்எல்ஏக்களாக உள்ளனர். ஒரு எம்எல்ஏ உயிரிழந்ததால் சட்டப் பேரவையில் ஒரு இடம் காலியாக உள்ளது.
மணிப்பூரில் கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் முதல் நிகழ்ந்த வன்முறையால் 260}க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அங்கு முதல்வராக இருந்த பிரேன் சிங் கடந்த ஆண்டு பிப்ரவரி 9}ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
அதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் பிப்ரவரி 13-ஆம் தேதி குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தவும் இயல்பு நிலையைக் கொண்டுவரவும் ஆளுநர் அஜய் குமார் பல்லா பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.