தில்லியில் முதல்வரை அறிவிக்க பாஜக தாமதப்படுவதைத் தொடர்ந்து தில்லி மக்களை கொள்ளையடிக்க மட்டுமே பாஜகவினருக்குத் தெரியும் என்று அதிஷி விமர்சித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், தில்லியின் காபந்து முதல்வருமான அதிஷி இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசினார். அதில், “தில்லி தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாள்கள் முடிந்துள்ளன. முதல்வரையும், அமைச்சரவையையும் பாஜக பிப்.9 அன்றே அறிவித்து வளர்ச்சிப் பணிகளை உடனடியாக மேற்கொள்வார்கள் என மக்கள் நினைத்தனர். ஆனால், தில்லியை நிர்வகிக்க அவர்களிடம் எவரும் இல்லை என்பது இப்போது தெளிவாகிறது.
தில்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 48 பாஜக எம்எல்ஏக்களில் எவரையும் பிரதமர் நரேந்திர மோடி நம்பவில்லை. பாஜகவுக்கு ஆட்சி நடத்துவதற்கான தொலைநோக்கு பார்வையோ திட்டமோ எதுவுமில்லை” என்று அதிஷி குற்றம் சாட்டினார்.
மேலும், "அவர்கள் அனைவரும் தில்லி மக்களைக் கொள்ளையடிப்பார்கள் என்பது பாஜகவுக்குத் தெரியும். அவர்களிடம் அரசாங்கத்தை நடத்தும் திறன் கொண்டவர்கள் யாரும் இல்லையென்றால், அவர்கள் எப்படி மக்களுக்காக வேலை செய்வார்கள்?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்ற பிறகு முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் முடிவில் அந்தக் கட்சியின் தலைமை தாமதம் ஏற்படுத்துவதால் ஆம் ஆத்மிக்கும் பாஜகவுக்கும் இடையிலான அரசியல் போர் மேலும் அதிகரித்துள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 இடங்களிலும், ஆம் ஆத்மி 22 இடங்களிலும் வெற்றிபெற்றன.
பிப்ரவரி 5 அன்று வாக்குப்பதிவு நடைபெற்று பிப்ரவரி 8 அன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
தில்லியில் ஆம் ஆத்மியின் பத்தாண்டு கால ஆட்சியை பாஜகவின் வெற்றி முடிவுக்குக் கொண்டுவந்தது.
கடந்த 2020 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி 70-க்கு 62 இடங்களில் வென்றது. அதேபோல, 2015 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி 67 இடங்கள் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.