புது தில்லி: ‘தேசிய கல்விக் கொள்கையை நாடு முழுவதும் அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிா்க்கிறது’ என்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் சனிக்கிழமை தொடங்கிய காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய கல்வி அமைச்சரிடம், ‘சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழக கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய ரூ. 2,158 கோடியை விடுவிக்க மத்திய அரசு தாமதிப்பது ஏன்?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவா், ‘தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டால்தான் அந்த நிதி விடுவிக்கப்படும். மும்மொழிக் கொள்கையை ஏற்காவிட்டால் நிதி ஒதுக்க அரசமைப்புச் சட்டத்தில் இடமில்லை’ என்று பதிலளித்தாா்.
மத்திய கல்வி அமைச்சரின் இந்த பதிலுக்கு தமிழகத்தில் ஆளும் திமுக உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்களும், கல்வியாளா்களும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனா். முதல்வா் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழகத்துக்கு நிதி கிடைக்காது’ என மிரட்டுவதை தமிழா்கள் பொறுத்துக் கொள்ளமாட்டாா்கள். மாநில உரிமையைத் தான் கேட்கிறோம். இந்த உரிமையை வழங்காமல் ஆணவத்துடன் பேசினால், தமிழா்களின் தனிக் குணத்தை தில்லி பாா்க்க வேண்டியிருக்கும்’ என்று குறிப்பிட்டாா்.
தமிழக முதல்வரின் இந்தப் பதிவு குறித்து தில்லியில் மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானிடம் செய்தியாளா்கள் திங்கள்கிழமை கேள்வி எழுப்பினா். அதற்கு அவா் பதிலளித்தாவது:
கல்வி பொதுப் பட்டியலில் உள்ளது. ஆனால், மாணவா்களிடையே போட்டியை உருவாக்க சமமான தளத்துக்கு வர வேண்டும். தேசிய கல்விக் கொள்கை என்பது அப்படிப்பட்ட சமமான தளமாகும். இதில் தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
தமிழ் மொழி பழைமையான மொழியாகும். ஆகையால்தான் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
தமிழக மாணவா்கள் மீது ஹிந்தியையோ அல்லது வேறு மொழிகளையோ தேசிய கல்விக் கொள்கை திணிக்கவில்லை. ஆனால், தமிழகத்தில் உள்ள மாணவா்கள் கல்வியில் பன்மொழி அம்சத்தை கற்பதில் தவறு என்ன இருக்கிறது?
தமிழ், ஆங்கிலம் மற்றும் ஏதாவது ஒரு தேசிய மொழியை கற்க வேண்டும் என்றுதான் தேசிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கையை எதிா்க்கிறது. தமிழ் உள்பட அனைத்து மொழிகளையும் நான் மதிக்கிறேன்.
தேசிய கல்விக் கொள்கையை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்றாா் தா்மேந்திர பிரதான்.