பிரதமர் மோடி மற்றும் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் சந்திப்பின் எதிரொலியாக வேலைவாய்ப்பு அறிவிப்பை டெஸ்லா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்கப் பயணத்தில் டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும் உலகின் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க்கை அவரது குடும்பத்துடன் சந்தித்து ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், இந்தப் பேச்சுவார்த்தையில் பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
அப்போது தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, சிறந்த ஆளுகை உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனா்.
இந்த நிலையில், டெஸ்லா நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி லிங்ககெடின் தளத்தில் 13 பேருக்கான வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், வாடிக்கையாளர்களை எதிர்கொள்ளும் மற்றும் பேக்-எண்ட் மென்பொருள் பொறியாளர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைகள் என்ன?
இந்த விண்ணப்பங்களில் டெஸ்லா ஆலோசகர், விற்பனை ஆலோசகர், நுகர்வோருக்கான ஆதரவு நிபுணர், நுகர்வோர் மேலாளர், ஒழுங்கு நடவடிக்கை நிபுணர், சேவை மேலாளர், வணிக செயல்பாடு ஆய்வாளர், கடை மேலாளர், உதிரிபாகங்களுக்கான ஆலோசகர், சேவை ஆலோசகர், விற்பனை செயல்பாடுகள் நிபுணர், வாடிக்கையாளர்களுக்கான மேற்பார்வையாளர் உள்ளிட்ட வேலைகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளன.
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு புகழ்பெற்ற நிறுவனமாக டெஸ்லா அதிகப்படியான இறக்குமதி வரியால் இந்தியாவில் பல ஆண்டுகளாக தங்களது வாகனங்களை விற்பனை செய்யாமல் இருந்து வந்தது. தற்போதைய மத்திய பட்ஜெட்க்குப் பின்னர் இந்தியாவில் 40,000 டாலருக்கு மேல் உள்ள எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான வரி 110 சதவிகிதத்தில் இருந்து 70 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், எலான் மஸ்க் - மோடி இருவருக்கும் இடையேயான சந்திப்பும் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
உலக வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் சீனாவுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை குறைவாகவே இருக்கிறது. கடந்தாண்டில் இந்தியா 1 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனையாகியிருக்கும் வேளையில் சீனாவில் 11 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்கப்பட்டிருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்திய சந்தையில் நுழையும் டெஸ்லா நிறுவனத்தின் நீண்டகால திட்டத்தை உறுதிப்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த பணியமா்த்தல் நடவடிக்கை மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, இந்தியாவில் டெஸ்லாவை அறிமுகப்படுத்த விரும்புவதாகவும் ஆனால் இந்தியாவில் இறக்குமதி வரிகள் அளவுக்கு அதிகமாக உள்ளதாகவும் எலான் மஸ்க் தெரிவித்து வந்தாா். இந்நிலையில், குறைந்தபட்சம் 50 கோடி டாலா் முதலீட்டில் இந்தியாவில் உற்பத்தி ஆலைகளை நிறுவும் நிறுவனங்களுக்கு இறக்குமதி வரிச் சலுகைகள் வழங்கப்படும் என்ற புதிய மின்சார வாகனக் கொள்கையை மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது.
தொடா்ந்து கடந்த ஏப்ரலில், எலான் மஸ்க் இந்திய பயணத்தைத் திட்டமிட்டிருந்தாா். அந்தப் பயணத்தில் இந்தியாவில் டெஸ்லாவின் அறிமுகம் குறித்த அறிவிப்பை மஸ்க் வெளியிடுவாா் என்று எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், கடைசிநேரத்தில் அந்தப் பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.