தில்லி முதல்வர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் மற்றும் பகத் சிங்கின் புகைப்படங்களை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தினர்.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அபார வெற்றி பெற்ற பாஜக 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. முதல்வராக ரேகா குப்தா மற்றும் 6 அமைச்சர்கள் கடந்த வாரம் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில், தில்லி முதல்வர் அலுவலகத்தில் முந்தைய முதல்வர் வைத்திருந்த அம்பேத்கர் மற்றும் பகத்சிங்கின் புகைப்படங்களை தற்போதைய அரசு அகற்றியுள்ளதாக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான அதிஷி குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
”பாரதிய ஜனதா கட்சி இன்று தலித் எதிர்ப்பு மற்றும் சீக்கிய எதிர்ப்பு முகத்தை நாட்டுக்குக் காட்டியுள்ளது. ஆட்சிக்கு வந்தவுடன், முதல்வர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் மற்றும் பகத் சிங்கின் படங்களை அகற்றியுள்ளனர்.
அம்பேத்கர் மற்றும் பகத் சிங்கைவிட பிரதமர் நரேந்திர மோடி உயர்ந்தவர் என்று பாஜக நினைக்கிறதா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே, தில்லி சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சட்டப்பேரவைக்கு வெளியே அதிஷி தலைமையில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.