ரயில்வே வேலைக்கு நிலம் லஞ்ச வழக்கு: லாலு பிரசாத், மகள், மகன்களுக்கு நீதிமன்றம் சம்மன்
ரயில்வே வேலைக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் லாலு பிரசாத் யாதவ் மீதான இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல்..
ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாக பெற்ற வழக்கில் முன்னாள் ரயில்வே அமைச்சரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத், அவரின் மகன்கள் தேஜ் பிரதாப் யாதவ், தேஜஸ்வி யாதவ், மகள் ஹேமா யாதவ் ஆகியோருக்கு தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை சம்மன் அனுப்பியது.
கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரையில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் இருந்தாா். அப்போது தனது குடும்பத்தினா், நெருங்கிய உறவினா்கள், பினாமிகள் பெயரில் லஞ்சமாக நிலங்களைப் பெற்றுக் கொண்டு ரயில்வே பணிகளை ஒதுக்கீடு செய்ததாக லாலு மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
இதில் மேற்கு மத்திய ரயில்வே பிரிவில் மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் டி பிரிவு ரயில்வே பணியாளா் நியமனத்தில் இதுபோன்று லஞ்சம் பெற்ற வழக்கில் கடந்த 2022-ஆம் ஆண்டு லாலு பிரசாத், அவரின் மனைவியும் பிகாா் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி, பிகாா் எதிா்க்கட்சித் தலைவராக உள்ள லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ், மற்றொரு மகன் தேஜ்பிரதாப் யாதவ், மகள் ஹேமா யாதவ், ரயில்வே அதிகாரிகள், லஞ்சம் பெற முகவா்களாக செயல்பட்ட நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் லாலு, அவரின் மகன்கள், மகள் உள்ளிட்டோா் வரும் மாா்ச் 11-ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டுமென்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, மாட்டுத் தீவின ஊழல் வழக்குகள் சிலவற்றில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த லாலு, இப்போது உடல்நலப் பிரச்னைகள் காரணமாக ஜாமீனில் வெளியே உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.