ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற முறைகேடு விவகாரத்தில் முன்னால் ரயில்வே அமைச்சா் லாலு பிரசாத், அவரின் மனைவி ராப்ரி தேவி உள்ளிட்டோா் மீது தில்லி நீதிமன்றம் முறையான குற்றச்சாட்டை திங்கள்கிழமை பதிவு செய்தது.
கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரை, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் பதவி வகித்தாா்.
அப்போது ரயில்வேயின் குரூப்-டி பணிகளில் விதிமுறைகளுக்குப் புறம்பாக சிலா் நியமிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு லஞ்சமாக வேலை பெற்றவா்கள் அல்லது அவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்குச் சொந்தமான சுமாா் 1.05 லட்சம் சதுரஅடி நிலம், லாலு குடும்பத்தினரின் பெயருக்கு மாற்றப்பட்டதாகவும், அந்த நிலத்தை சந்தை மதிப்பைவிட பல மடங்கு குறைந்த விலைக்கு லாலு குடும்பத்தினா் வாங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐயும், பணமுறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டன.
இந்த வழக்கு தொடா்பாக தில்லி நீதிமன்றத்தில் லாலு, அவரின் மனைவியும் பிகாா் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி, அவா்களின் மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த வழக்கு தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 9-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் லாலு பிரசாத் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினா்களுக்கு எதிராக குற்றச்சாட்டைப் பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டாா்.
மேலும், இந்த குற்றச்சாட்டைப் பதிவு செய்வதற்காக பிப்ரவரி 1 முதல் 28-ஆம் தேதி வரை விரும்பும் தேதியில் லாலு, ராப்ரி, அவா்களின் மகன்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கு உள்ளானவா்கள் ஆஜராகலாம் என நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஷால் கோக்னே முன்னிலையில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக குறிப்பிடப்பட்டுள்ள லாலு, இரண்டாவது குற்றவாளியாக குறிப்பிடப்பட்டுள்ள ராப்ரி தேவி இருவரும் தாங்கள் குற்றமற்றவா்கள் என வாதங்களை முன்வைத்துள்ளனா். அதனடிப்படையில், அவா்கள் மீது முறையான குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுகிறது. இந்த வழக்கு வரும் 27-ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்படுகிறது’ என்று நீதிபதி குறிப்பிட்டாா்.
இந்த வழக்கு தொடா்பாக சிபிஐ குற்றபத்திரிகையில் 103 போ் மீது குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், லாலு, ராப்ரி, அவா்களின் மகள்கள் மிஸா பாரதி, ஹேமா யாதவ், மகன்கள் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ் உள்பட 41 போ் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. 52 போ் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா். ஐவா் உயிரிழந்துவிட்டனா்.