தில்லி தெற்காசிய பல்கலைக்கழகத்தில் அசைவம் சாப்பிட்ட மாணவிகளை ஏபிவிபி அமைப்பினர் தாக்கியதாக எஸ்எஃப்ஐ அமைப்பினர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
அதேபோல், சிவராத்திரி தினத்தில் விரதம் இருந்த மாணவர்களுக்கு வலுகட்டாயமாக அசைவ உணவை எஸ்எஃப்ஐ அமைப்பினர் பரிமாறியதாக ஏபிவிபியினர் பரஸ்பர குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர்.
நாடு முழுவதும் புதன்கிழமை சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், தில்லியில் உள்ள தெற்காசிய பல்கலைக்கழகத்தில் அசைவ உணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகள் மீது ஏபிவிபியினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இந்திய மாணவர்கள் சங்கத்தினர் (எஸ்எஃப்ஐ) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
”மகா சிவராத்திரியை முன்னிட்டு பல்கலைக்கழக உணவகத்தில் அசைவ உணவு வழங்கக்கூடாது என்ற ஏபிவிபியின் ஜனநாயக விரோத கோரிக்கையை நிறைவேற்றாததால் மாணவர்கள் மீது ஏபிவிபியினர் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பல்கலைக்கழக உணவகம் அனைத்து மாணவர்களுக்கும் பொதுவான இடமாகும். மேலும் எந்தவொரு சமூகத்தின் உணவுப் பழக்கவழக்கங்களையும் மற்ற மாணவர் சமூகத்தின் மீது திணிப்பது ஜனநாயக விரோதமானது மற்றும் மதச்சார்பற்றது.
ஏபிவிபி குண்டர்கள் மாணவியின் தலைமுடியைப் பிடித்து இழுக்கும் காட்சிகள் காணொலியில் இடம்பெற்றுள்ளது. அசைவ உணவு பரிமாறிய உணவக ஊழியர்களையும் அவர்கள் தாக்கினர்.
மாணவர்களை தாக்கியவர்கள் மீது தெற்காசிய பல்கலைக்கழக நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், எபிவிபி அமைப்பினரும், சிவராத்திரி அன்று விரதம் இருந்த மாணவ, மாணவிகளுக்கு வலுகட்டாயமாக அசைவ உணவை எஸ்எஃப்ஐ அமைப்பினர் பரிமாறியதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
இந்த நிலையில், தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் மாணவிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இரு தரப்பினரிடையே விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தில்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.