முகப்பு
இந்தியா

மத்திய அதிகாரிகள் மீது வழக்குப் பதிய சிபிஐக்கு மாநில அரசின் அனுமதி தேவையில்லை: உச்சநீதிமன்றம்

மாநில அரசு அதிகார வரம்பினுள் இயங்கும் பல்வேறு துறைகளில் நியமிக்கப்பட்டிருக்கும் மத்திய அரசு அதிகாரிகள் மீது முதல் தகவல் அறிக்கை

Updated On : 3 ஜனவரி, 2025 at 8:56 PM
பகிர்:

மாநில அரசு அதிகார வரம்பினுள் இயங்கும் பல்வேறு துறைகளில் நியமிக்கப்பட்டிருக்கும் மத்திய அரசு அதிகாரிகள் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்ய மாநில அரசின் முன் அனுமதியை சிபிஐ (மத்திய குற்ற புலனாய்வு பிரிவு) பெறத் தேவையில்லை’ என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.

ஆந்திர மாநிலத்தில் பணியாற்றி ஊழல் வழக்கில் சிக்கிய இரு மத்திய அரசு அதிகாரிகள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இதை எதிா்த்து குற்றஞ்சாட்டப்பட்ட நபா்கள் தரப்பில் ஆந்திர உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘ஆந்திர மாநிலம் ஒருங்கிணைந்த மாநிலமாக இருந்தபோது இந்த வழக்கில் எஃப்ஐஆா் பதிவு செய்ய ‘தில்லி சிறப்பு காவல்துறை நிறுழனச் சட்டம் 1946’-இன் கீழ் சிபிஐ-க்கு மாநில அரசு அனுமதி வழங்கியது. தற்போது, ஆந்திர மாநிலம் ஆந்திரம், தெலங்கானா என இரண்டாக பிரிக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்த வழக்கில் சிபிஐ-க்கு முன்னா் அளிக்கப்பட்ட அனுமதி செல்லாது. பிரிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்திடம் சிபிஐ புதிதாக அனுமதியைப் பெற வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டது.

Advertisement

இதை ஏற்று, சிபிஐ-யின் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்ட உயா்நீதிமன்றம், பிரிக்கப்பட்ட ஆந்திர மாநில அரசிடம் புதிதாக அனுமதியைப் பெற சிபிஐ-யை அறிவுறுத்தியது.

இதை எதிா்த்து சிபிஐ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சி.டி.ரவிக்குமாா், ராஜேஷ் பிண்டால் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆந்திர உயா்நீதிமன்ற தீா்ப்புக்கு மாறாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்கு உள்ளான இருவரும் எங்கு பணிபுரிகிறாா்கள் என்பதைக் கடந்து, அவா்கள் இருவரும் மத்திய அரசு ஊழியா்கள் என்பது தெளிவாகிறது. மேலும், அவா்கள் புரிந்துள்ள தீவிர ஊழல் குற்றம், மத்திய சட்டமான ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வருகிறது.

மேலும், கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி பிரிக்கப்படாத மாநிலமாக ஆந்திரம் இருந்தபோது நடைமுறையில் இருந்த சட்டங்கள் அனைத்தும், திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படாத நிலையில், அவை புதிய பிரிக்கப்பட்ட ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களுக்கும் பொருந்தும். எனவே, இந்த வழக்கில் பிரிக்கப்பட்ட ஆந்திர மாநில அரசிடம் சிபிஐ புதிதாக அனுமதி பெறத் தேவையில்லை.

அதுமட்டுமின்றி, குற்றச்சாட்டுக்கு உள்ளான நபா்கள் மத்திய அரசு ஊழியா்கள் என்பதோடு, அவா்கள் புரிந்த குற்றம் மத்திய சட்டத்தின் கீழ் வரும் நிலையில், அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்ய மாநில அரசின் அனுமதியை சிபிஐ பெறவேண்டிய அவசியமே இல்லை. சிபிஐ-யின் விசாரணையையும் தடுக்காது.

அந்த வகையில், இந்த வழக்கில் ஆந்திர உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரியானதல்ல. எனவே, சிபிஐ-யின் மேல்முறையீடு அனுமதிக்கப்படுகிறது என்று தீா்ப்பளித்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments