தில்லியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை வழங்குவதற்காக பியாரி திதி யோஜனா திட்டத்தை அறிவித்துள்ளது.
தலைநகர் தில்லியில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து, ஆம் ஆத்மி கட்சி, அதனுடனான அரசியல் கூட்டணியை அண்மையில் முறித்துக் கொண்டுள்ள காங்கிரஸ், எதிர்க்கட்சியான பாஜக ஆகிய கட்சிகள் ஆயத்தமாகியுள்ளன.
இந்த நிலையில், பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும் எனக் காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.
இதுதொடர்பாக கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறியதாவது,
தில்லியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பியாரி திதி யோஜனா திட்டத்தின் மூலம் பெண்களுக்கு ரூ. 2,500 வழங்கப்படும். கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு கடைப்பிடித்த மாதிரியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
புதிய அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்தார். மேலும் பெண்களுக்கு நிதி ரீதியாக அங்கீகாரம் அளிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும் என்றார்.
தில்லியில் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்று நாங்கள் நம்புகிறோம். புதிய அமைச்சரவையின் முதல் நாளில் தலைநகரில் உள்ள ஒவ்வொரு பெண்களுக்கும் ரூ. 2,500 வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவோம்.
இந்த அறிவிப்பின் போது தில்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ், தில்லி பொறுப்பாளர் காஜி நிஜாமுதீன் மற்றும் மூத்த தலைவர்கள் உடனிருந்தனர்.
70 உறுப்பினர்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்னும் அறிவிக்காத நிலையில், ஆம் ஆத்மி தில்லியில் களமிறங்கும் வேட்பாளர்களை அறிவித்து முடிந்தது. இந்த நிலையில் பாஜக, காங்கிரஸ் தனது வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.