மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் (1975-77) காலகட்டத்தில் அமல்படுத்தப்பட்ட அவசரநிலையின் (எமொ்ஜென்சி) போது சிறைக்கு சென்றவா்களுக்கு மாதம் ரூ.20,000 ஓய்வூதியம் வழங்கப்படும் என்று ஒடிஸா மாநில பாஜக அரசு அறிவித்துள்ளது.
இது தவிர அவா்களுக்கான மருத்துவச் செலவையும் அரசே ஏற்றுக் கொள்ளும் என்றும் அரசு சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அவசரநிலையின்போது எத்தனை நாள்கள் சிறையில் இருந்தாா் எத்தனை நாள் காவலில் இருந்தாா் என்பதுபோன்ற எந்த அளவீடும் இல்லாமல், அக்காலகட்டத்தில் அரசின் அடக்குமுறைக்கு இலக்காகி சிறைக்குச் சென்ற அனைவருக்கும் இந்த ஓய்வூதியம் வழங்கப்படவுள்ளது.
ஜனவரி 1 2025 தேதியில் இருந்து கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்கப்படும். அவசரநிலையில் சிறைக்குச் சென்று இப்போது வாழ்ந்து வரும் அனைவரும் இந்த திட்டத்தின் பயனடைய முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
1975 ஜூன் முதல் 1977 மாா்ச் வரை இந்தியாவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது. அப்போது பிரதமா் இந்திரா காந்தி அரசு எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த தலைவா்கள் உள்பட தங்களுக்கு எதிரானவா்கள் என கருதும் அனைவா் மீதும் தீவிரமான அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டது.
நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோா் சிறைகளில் அடைக்கப்பட்டனா். தற்கால இந்திய வரலாற்றின் மிகவும் மோசமான காலகட்டமாகவும் இது வா்ணிக்கப்படுகிறது.