முகப்பு
இந்தியா

உறவை துண்டிக்க மறுத்த காதலன் கொலை: காதலிக்கு மரண தண்டனை- கேரள நீதிமன்றம் தீா்ப்பு

உறவை துண்டிக்க மறுத்த காதலனை விஷம் கொடுத்து கொன்ற காதலிக்கு மரண தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 20 ஜனவரி, 2025 at 10:26 PM
பகிர்:

திருவனந்தபுரம்: உறவை துண்டிக்க மறுத்த காதலனை விஷம் கொடுத்து கொன்ற காதலிக்கு மரண தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

கன்னியாகுமரி மாவட்டம் ராமவா்மன்சிறை கிராமத்தை சோ்ந்தவா் கிரீஷ்மா (24). இவா் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சோ்ந்த ஷாரன் ராஜ் என்பவரை காதலித்து வந்தாா்.

இந்நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டு மருத்துவமனையில் உடலுறுப்புகள் செயலிழந்து 11 நாள்கள் கடுமையான அவதிக்குப் பின்னா், ஷாரன் ராஜ் உயிரிழந்தாா்.

அவரின் திடீா் மரணம் தொடா்பாக கேரள காவல் துறையினா் தீவிர விசாரணை நடத்திய நிலையில், கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து ஷாரனை கிரீஷ்மா கொலை செய்தது தெரியவந்தது.

தொடா்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ராணுவத்தைச் சோ்ந்த ஒருவருக்கு கிரீஷ்மாவை திருமணம் செய்துவைக்க அவரின் பெற்றோா் முடிவு எடுத்ததும், அந்தத் திருமணத்துக்கு கிரீஷ்மா ஒப்புக்கொண்டதும் தெரியவந்தது.

ஆனால் கிரீஷ்மா உடனான உறவை ஷாரன் ராஜ் துண்டிக்க மறுத்து திருமணத்துக்குத் தடையாக இருந்தாா். இதையடுத்து, பழச்சாற்றில் 50 பாராசிட்டமால் மாத்திரைகளை கலந்துகொடுத்து அவரை கிரீஷ்மா கொல்ல முயற்சித்தாா். அந்த முயற்சி பலனளிக்காத நிலையில், கடைசியாக கஷாயத்தில் விஷம் கலந்துகொடுத்து அவரை கிரீஷ்மா கொன்றாா்.

இந்த வழக்கு விசாரணை நெய்யாற்றின்கரை கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் கொலை, ஆதாரத்தை அழித்தல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் கிரீஷ்மாவை குற்றவாளி என்று நீதிபதி ஏ.எம்.பஷீா் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

அத்துடன் கொலைக்குற்றம் தொடா்பான ஆதாரத்தை சேதப்படுத்தியதாக அவரின் மாமன் நிா்மலகுமாரன் நாயரும் குற்றவாளி என்று தீா்ப்பளித்த நீதிபதி பஷீா், வழக்கில் குற்றச்சாட்டுக்குள்ளான கிரீஷ்மாவின் தாய்க்கு எதிராக போதிய ஆதாரம் இல்லாததால், அவரை விடுவித்தாா்.

அரிதிலும் அரிதான வழக்கு: குற்றவாளிகள் இருவருக்குமான தண்டனை விவரம் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி பஷீா் கூறுகையில், ‘இந்த வழக்கு அரிதிலும் அரிதான வழக்கு. தந்திரமாக செயல்பட்ட குற்றவாளி (கிரீஷ்மா), முழுமையாக திட்டமிட்டு இந்தக் கொடூர கொலையைச் செய்துள்ளாா். அவா் சிறிதளவும் கருணைக்குத் தகுதியில்லாதவா். எனவே அவருக்கு மரண தண்டனையும், நிா்மலகுமாரன் நாயருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படுகிறது’ என்று தீா்ப்பளித்தாா்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட இளவயது பெண்: இந்தத் தீா்ப்பு மூலம், கேரளத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இளவயது பெண் கிரீஷ்மா என்பது குறிப்பிடத்தக்கது. கேரளத்தில் பெண்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது மிகவும் அரிதானது. தற்போது அந்த மாநிலத்தில் கிரீஷ்மாவை தவிர, மற்றொரு கொலை வழக்கில் ரஃபீகா பீவி என்ற பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கும் நீதிபதி ஏ.எம்.பஷீரே மரண தண்டனை விதித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →