47 டி-72 கவச வாகனங்கள் கொள்முதல்: ரூ.1,560 கோடிக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்
பாலம் அமைக்கக் கூடிய 47 டி-72 கவச வாகனங்களை ரூ.1,560.52 கோடி செலவில் கொள்முதல் செய்வதற்கு கனரக வாகனங்கள் தொழிற்சாலையுடன் பாதுகாப்பு அமைச்சகம்
புது தில்லி: பாலம் அமைக்கக் கூடிய 47 டி-72 கவச வாகனங்களை ரூ.1,560.52 கோடி செலவில் கொள்முதல் செய்வதற்கு கனரக வாகனங்கள் தொழிற்சாலையுடன் பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை ஒப்பந்தம் மேற்கொண்டது.
பாலம் அமைக்கக் கூடிய கவச வாகனங்கள் தாக்குதல் மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளின்போது பயன்படுத்தப்படும்.
இந்த வாகனத்தின் மேற்புறத்தில் உள்ள இரும்பு பாகம், தேவைப்படும்போது பாலம் போல விரியும். நிலப்பரப்புகளை கடந்து செல்வதில் தடைகள் ஏற்படும்போது, அந்த பாலத்தை விரித்து மிகக் குறைந்த நேரத்தில் கவச வாகனங்கள் உள்ளிட்டவை தடைகளை கடந்து கடக்கும்.
இந்நிலையில், பாலம் அமைக்கக் கூடிய 47 டி-72 கவச வாகனங்களை கொள்முதல் செய்ய, ஆா்மா்ட் வெய்கில் நிகம் நிறுவனத்தின் (ஏவிஎன்எல்) பிரிவான கனரக வாகனங்கள் தொழிற்சாலையுடன் பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை ஒப்பந்தம் மேற்கொண்டது. தில்லியில் பாதுகாப்புத் துறைச் செயலா் ராஜேஷ்குமாா் சிங் முன்னிலையில், இந்த ஒப்பந்தம் கையொப்பமானது.
ராணுவ பயன்பாட்டுக்கு ரூ.1,560.52 கோடி செலவில் இந்த வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன என்று பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.