உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் 9,000-க்கும் மேற்பட்ட பணியாளா்களை நீக்க முடிவெடுத்துள்ளது. அதில், 25 ஆண்டுகள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மேலாளராக இருந்தவரும் ஒருவர்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனமானது, தனது பணியாளர்களுக்கு பணி நீக்க நோட்டீஸை புதன்கிழமை முதல் அனுப்பி வருகிறது. இதில், அமெரிக்காவைச் சேர்ந்த மேலாளர் ஒருவரும் உள்ளார். அவர், மைக்ரோசாஃப்டில் தனது 25 ஆண்டுகால பணி நிறைவைக் கடந்த மாதம் சிறப்பாகக் கொண்டாடிய நிலையில், இன்று தனது பணி நீக்க நோட்டீஸை பெற்றிருப்பது குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம், மைக்ரோசாப்டில் எனது 25 ஆண்டு கால பணி நிறைவைக் கொண்டாடியிருந்தேன். இன்று, என்னை பணி நீக்கம் செய்துவிட்ட நோட்டீஸ் கிடைத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும், இது எதிர்பாராத திருப்பம் என்றும், இது தன்னை மட்டுமல்லாமல், என்னுடைய ஒட்டுமொத்த குழுவையும் பாதித்திருக்கிறது என்று உருக்கமாக பதிவிட்டிருப்பதோடு, தன்னுடன் பணியாற்றிய குழுவினருக்கு சிறப்பான எதிர்காலம் அமைய வேண்டும் என்று வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
நான் இந்த முடிவை ஏற்றுக்கொண்டு புதிய அத்தியாயத்தில் பயணிக்கப் போகிறேன். புதிய வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் கடந்த 2000ஆவது ஆண்டில் இணைந்திருக்கிறார். பல்வேறு பதவிகளை வகித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனம், கடந்த மே மாதம் மேற்கொண்ட பணிநீக்க நடவடிக்கையின்போது 6,000 போ் வரை வெளியேற்றப்பட்டனா். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அடுத்தகட்ட பணிநீக்க அறிவிப்பை அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் கடந்த 2023-ஆம் ஆண்டு முதலே அதிக அளவில் பணிநீக்க நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.
தற்போது, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விற்பனை-சந்தைப்படுத்துதல் பிரிவில் இருந்து அதிகமானோா் விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். 2024 ஜூன் நிலவரப்படி மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் 2,28,000 போ் பணியாற்றி வருகின்றனா். இந்தியாவில் சுமாா் 20,000 பணியாளா்கள் உள்ளனா் என்கிறது தரவு. பணி நீக்க நடவடிக்கைக்குக் காரணமாக செயற்கை நுண்ணறிவுப் பிரிவில் அதிக அளவில் முதலீடு செய்வதால் செலவினங்களைக் குறைக்க பணியாளா்கள் நீக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.