சீனாவின் ஆயுதங்களை சோதிக்கும் இடமாகத்தான் பாகிஸ்தான் இருப்பதாக துணை ராணுவத் தலைமைத் தளபதி தெரிவித்தார்.
தில்லியில் நடைபெற்ற ராணுவத் துறையின் நிகழ்ச்சியில் துணை ராணுவத் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சிங் ராகுல் ஆர்.சிங் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், நமக்கு எல்லை ஒன்றுதான்; ஆனால், எதிரிகள் 3 பேர் இருந்தனர். அதில் பாகிஸ்தான் முன்னணியில் இருந்தது. தன்னுடைய ஆயுதங்களை சோதிக்கும் களமாக பாகிஸ்தானை சீனா கொண்டுள்ளது.
பாகிஸ்தானின் ஒட்டுமொத்த ஆயுதங்களில் 81 சதவிகித அளவிலான ஆயுதங்களை சீனாதான் வழங்கியது. பாகிஸ்தானுக்கு துருக்கியும் ஆதரவு அளித்தது.
ஒரு நாட்டின் ராணுவத்துக்கு வலுவான வான் பாதுகாப்பு அமைப்பு தேவை. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது, வான் பாதுகாப்பு அமைப்புகள் எவ்வாறு செயல்பட்டு பங்களித்தது என்பது முக்கியம்.
இந்தியாவின் தொழில்நுட்பம் மற்றும் உளவுத் தகவல்கள் மூலம், பாகிஸ்தானில் 21 பயங்கரவாத முகாம்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றில் 9 இலக்குகள் அழிக்கப்பட்டன.
போரைத் தொடங்குவது எளிதுதான்; ஆனால், அதனைக் கட்டுப்படுத்துவதுதான் மிகவும் கடினம். சரியான நேரத்தில் போரை நிறுத்த வேண்டும். அந்த வகையில், ஆபரேஷன் சிந்தூர் சிறந்த தாக்குதலே.
போரை எதிர்கொள்ள அனைத்து வகையிலும் இந்தியா தயாராக இருக்க வேண்டும். அடுத்த முறை பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், மக்கள் நடமாட்டப் பகுதிகளில்தான் குறிவைக்கும். அதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.