மதுபானக் கொள்கை விவகாரத்தில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகலின் மகன் சைதன்யா பாகல் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2019 முதல் 2022 வரையிலான ஆட்சிக்காலத்தில் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் அரசு, அதிகமான மதுபான ஊழலில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இவ்விவகாரத்தில், பூபேஷ் பாகலின் மகன் சைதன்யா பாகல் மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை கடந்த மார்ச் 9 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தது.
இந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் மூலம் அரசுக்கு சுமார் ரூ.2,100 கோடிவரை இழப்பு ஏற்பட்டதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இவ்வழக்கில் துர்க் மாவட்டத்தின் பிலாய் நகரில் உள்ள சைதன்யா பாகலின் வீட்டிற்கு வெள்ளிக்கிழமை காலை வந்த அமலாக்கத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையைத் தொடர்ந்து பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சைதன்யா கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து சைதன்யாவை ஐந்து நாள்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டிருப்பதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக அமலாக்கத்துறையின் சோதனையின் காரணமாக சைதன்யாவின் வீட்டிற்கு வெளியே காங்கிரஸ் தொண்டர்கள் கூடியதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. சைதன்யாவின் பிறந்த நாளான இன்று அவர் கைது செய்யப்பட்டிருப்பது கட்சித் தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.