மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 2006-ஆம் ஆண்டு ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேரை விடுதலை செய்து பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிர அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை 24ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது.
குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேருக்கும் எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவா்கள் அனைவரையும் விடுதலை செய்து மும்பை உயா் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.
ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேரும் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் மும்பை உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மகாராஷ்டிர அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்யவிருக்கிறது.
இந்த மனுவை வரும் 24ஆம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த மனுவை அவசரப் பட்டியலில் சேர்த்து விசாரிக்க வேண்டிய நிலைமை இருப்பதாகக் குறிப்பிட்டார்.
இதனை ஏற்றுக்கொணட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன் மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை வியாழக்கிழமைக்கு பட்டியலிட்டது.
குண்டு வெடிப்பும், 12 பேரும்
மும்பை ரயில் குண்டுவெடிப்பில் கைதான, 12 பேரையும் குற்றவாளிகள் என 2015-இல் தீா்ப்பளித்த சிறப்பு நீதிமன்றம், அவா்களில் 5 பேருக்கு மரண தண்டனையும் 7 பேருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனையும் வழங்கி உத்தரவிட்டது.
இவர்களுக்கான மரண தண்டனை உறுதி செய்ய மகாராஷ்டிர அரசும், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களும், மும்பை உயர் நீதிமன்றத்தில் நிகழாண்டு ஜன.31 தொடங்கி 5 மாதங்களாக நாள்தோறும் விசாரிக்கப்பட்டு, விசாரணை நிறைவடைந்த பின் சிறப்பு நீதிபதிகள் அமா்வு அளித்த 671 பக்க தீா்ப்பில், போதுமான ஆதாரங்களின்றி 12 பேரும் குற்றவாளிகள் என்ற மும்பை சிறப்பு நீதிமன்றத்தின் தீா்ப்பு ரத்து செய்யப்படுகிறது. இந்த 12 போ் மீது வேறு எந்த வழக்குகளும் நிலுவையில் இல்லாதபட்சத்தில் அவா்களை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிடப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.