ஆதார், வாக்காளர் மற்றும் குடும்ப அட்டைகள் நம்பகமான ஆவணங்கள் அல்ல என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிரான வழக்கில், அந்தப் பணிகளின்போது வாக்காளர் பதிவுக்கு ஆதார், வாக்காளர் மற்றும் குடும்ப அட்டைகளையும் பயன்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த நிலையில், தேர்தல் ஆணையம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
நிகழாண்டு நடைபெறும் பிகார் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, 22 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப் பணிகளின் கீழ் அந்த மாநிலத்தில் 2003-ஆம் ஆண்டுக்குப் பின்னர், வாக்காளராகப் பதிவு செய்துகொண்டவர்கள், தாங்கள் இந்தியர்கள் என்பதை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) நகல் போன்ற கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
நிகழாண்டு இறுதியில் பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்குள் தங்கள் குடியுரிமையை நிரூபிப்பதற்கான சான்றிதழ்களை வழங்க முடியாவிட்டால், வாக்காளர் பட்டியலில் இருந்து ஏராளமானோர் நீக்கப்படக் கூடும் என்று தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன.
இந்தப் பணிகளுக்கு எதிராக எதிர்க்கட்சியினர், தன்னார்வ அமைப்பினர் தாக்கல் செய்த மனுக்களை அண்மையில் விசாரித்த உச்சநீதிமன்றம், சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு தடை விதிக்க மறுத்தது. அத்துடன் வாக்காளர் பதிவுக்கு ஆதாரமாக ஆதார், வாக்காளர் மற்றும் குடும்ப அட்டைகளையும் பயன்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.
பிரமாண பத்திரம்...: நாட்டின் பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இந்தப் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டதாவது:
சட்ட சிக்கல்கள் உள்ளபோதிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின்போது வாக்காளரை அடையாளம் காண மட்டும் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை ஆகியவை ஆராயப்படுகின்றன. இந்த நடைமுறை பிகார் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது ஏற்கெனவே பின்பற்றப்பட்டு வருகிறது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 21 (3) -ஆவது பிரிவின்படி, பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் கீழ், அந்தப் பட்டியல் புதிதாக தயாரிக்கப்பட உள்ளது. வாக்காளரின் குடியுரிமையை சரிபார்க்க தற்போதைய வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், வாக்காளர் அட்டையை ஆவணமாக ஏற்க முடியாது. ஏனெனில் அந்த வாக்காளர் பட்டியலே மாற்றப்பட உள்ளது.
ஆதார் ஆதாரம் அல்ல: குடியுரிமை அல்லது வசிப்பிடம் உள்ளிட்டவைக்கு ஆதார் எண் ஆதாரம் அல்ல என்று ஆதார் சட்டம் 2016-இன் 9-ஆவது பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி குடும்ப அட்டைகள்: போலி குடும்ப அட்டைகள் பரந்த அளவில் உள்ளதால், குடும்ப அட்டைகளை ஆவணமாக ஏற்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது. கடந்த மார்ச் 7-ஆம் தேதி 5 கோடி போலி குடும்ப அட்டைகளை நீக்கியதாக மத்திய அரசு தெரிவித்ததை அடிப்படையாகக் கொண்டு, இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.
ஆதார், வாக்காளர் மற்றும் குடும்ப அட்டைகள் நம்பகமான ஆவணங்கள் இல்லை என்பதால், அவற்றை வாக்காளர் வாக்களிக்க தகுதிவாய்ந்தவர் என்பதற்கு ஆதாரமாக ஏற்க முடியாது.
குடியுரிமையை சரிபார்க்க அதிகாரம் உள்ளது
வாக்காளரின் குடியுரிமையை சரிபார்ப்பதற்கான அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. அரசமைப்புச் சட்டப் பிரிவு 326, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950-இன் 16, 19-ஆவது பிரிவுகளின்படி, இந்திய குடிமக்கள் மட்டுமே வாக்காளராகப் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்யவேண்டிய சட்டபூர்வ கடமை தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது.
வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதியற்ற வாக்காளர்களை களைந்து தேர்தல் பரிசுத்தமாக நடைபெறுவதற்கு சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேலும் உதவுகிறது. இதில் அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் 19, 21-ஆகியவை மீறப்படுவதாகக் கூறமுடியாது என்று தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.