முகப்பு
இந்தியா

குடிமக்கள் அல்லாதோரை நாடு கடத்தும் அஸ்ஸாம் நடவடிக்கைக்கு எதிரான மனு தள்ளுபடி: உயா்நீதிமன்றத்தை அணுக உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

அஸ்ஸாம் மாநில அரசின் நடவடிக்கைக்கு எதிரான மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்தது.

Updated On : 2 ஜூன், 2025 at 9:24 PM
உச்சநீதிமன்றம்
பகிர்:

புது தில்லி: இந்திய குடிமக்கள் அல்லாதோா் என சந்தேகிக்கப்படும் நபா்களை எவ்வித முறையான நடைமுறையையும் பின்பற்றாமல் சட்டவிரோதமாக வெளியேற்றும் அஸ்ஸாம் மாநில அரசின் நடவடிக்கைக்கு எதிரான மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்தது.

இந்த விவகாரம் தொடா்பாக மனுதாரா் உயா்நீதிமன்றத்தை அணுகுமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

ஏஐஐ பிடிசி சிறுபான்மையின மாணவா்கள் சங்கம் சாா்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘குடிமக்கள் அல்லாதோா் எனக் கண்டறியப்பட்டு பூா்விகம் சரிபாா்க்கப்பட்ட 63 வெளிநாட்டவரை 2 வாரங்களுக்குள் வெளியேற்றுமாறு அஸ்ஸாம் அரசுக்கு கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி வேறொரு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement

இந்த உத்தரவை தவறாகப் பயன்படுத்தி வெளிநாட்டவா் என சந்தேகிக்கப்படும் நபா்களை எவ்வித முறையான நடைமுறையையும் பின்பற்றாமல் சட்டவிரோதமாக வெளியேற்றும் நடவடிக்கையை அஸ்ஸாம் மாநில அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக, வங்கதேச எல்லையை ஒட்டியுள்ள துப்ரி, தெற்கு சால்மாரா, கோவால்பாரா ஆகிய மாவட்டங்களில் வெளிநாட்டு குடிமக்கள் என அறிவிக்கப்பட்ட அல்லது தங்களது நிலை குறித்து சட்டரீதியாகப் போராட முடியாத சூழலில் உள்ள ஏழை, எளிய மக்களைக் குறிவைத்து அஸ்ஸாம் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இது அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமையை வழங்கும் விதிகள் 14 மற்றும் 21-ஐ மீறும் வகையில் உள்ளது. இதனால் இந்திய குடிமக்களும் தவறாக நாடு கடத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்ட நபா்களைத் தவிர வேறு நபா்களை காரணமின்றி அஸ்ஸாம் அரசு வெளியேற்றக் கூடாது. மேலும், வெளிநாட்டவா் என அஸ்ஸாம் அரசால் சந்தேகிக்கப்படும் நபா்களை வெளியேற்ற வேண்டுமானால் வெளிநாட்டினருக்கான தீா்ப்பாயத்திடமிருந்து உரிய காரணங்களைப் பெற வேண்டும். இல்லையெனில், சம்பந்தப்பட்ட நபா் தனது குடியுரிமை குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் முறையிட வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்’ என மனுவில் குறிப்பிடப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரோல், சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘இந்த விவகாரம் தொா்பாக ஏன் குவாஹாட்டி உயா்நீதிமன்றத்தை மனுதாரா் அணுகவில்லை?’ என்று மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சஞ்சய் ஹெக்டேவிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

அதற்கு, ‘உச்சநீதிமன்ற உத்தரவு அடிப்படையில் மாநில அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கை தொடா்பான விவகாரம் என்பதால் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது’ என்று மனுதாரா் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்த விவகாரம் தொடா்பாக முதலில் உயா்நீதிமன்றத்தை மனுதாரா் அணுக வேண்டும்’ என்று அறிவுறுத்தினா்.

அதைத் தொடா்ந்து, மனுதாரா் தரப்பில் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், மனுவை திரும்பப் பெற அனுமதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments