முகப்பு
இந்தியா

மும்பை புறநகர் ரயில் விபத்துகளில் 20 ஆண்டுகளில் 51,000 பேர் மரணம்!

மும்பை புறநகர் ரயில்களில் தொடர்கதையாகும் விபத்துகள்: 20 ஆண்டுகளில் 51,000 பேர் மரணம்

Updated On : 9 ஜூன், 2025 at 9:00 AM
மும்ப்ரா ரயில் நிலையத்தில் விபத்து
பகிர்:

மும்பை: மும்பை புறநகர் ரயில்களில் விபத்துகள் தொடர்கதையாகி வருகின்றன. மும்பை புறநகர் ரயில் நிலையங்களில் கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள விபத்துகளில் 51,000க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியை அதிகரித்துள்ளது.

வாரத்தின் முதல் வேலை நாளான இன்று(ஜூன் 9) காலை, இந்தியாவின் வர்த்தக தலைநகரமான மும்பையில் வேலைக்குச் செல்லும் அவசரத்தில் ரயில்களின் வாசற்படிகளில் நின்றபடி சென்ற பயணிகள் ரயில் விபத்தில் சிக்கினர்.

ரயில் வாசற்படிகளில் தொங்கியபடி கசரா பகுதியிலிருந்து புறப்பட்ட ரயிலிலும், மறுமார்க்கத்தில் மும்பை சி.எஸ்.எம்.டி நிலையத்துக்கு சென்று கொண்டிருந்த ரயிலிலும் பயணித்த பயணிகள், இரு ரயில்களும் மும்ப்ரா ரயில் நிலையம் அருகே கடந்து சென்றபோது பயணிகள் ஒருவரையொருவர் உரசி மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாகவும் மொத்தம் 6 பேர் கீழே விழுந்ததில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாடெங்கிலும் இந்த துயரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மும்பை புறநகர் ரயில் நிலையங்களில் கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள விபத்துகளில் 51,000க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியை அதிகரித்துள்ளது.

மேற்கு ரயில்வே மண்டலத்தில் மொத்தம் 1,394 புறநகர் ரயில் நிலையங்கள் உள்ளன. அவற்றில் நாளொன்றுக்கு 35 லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர். ரயில் சேவைகளை பயன்படுத்துகின்றனர். மத்திய ரயில்வே மண்டலத்தில் 1,810 புறநகர் ரயில் நிலையங்களும் அவற்றில் நாளொன்றுக்கு 40 லட்சம் பயணிகளும் ரயில் சேவைகளை பயன்படுத்துகின்றனர்.

ரயில்வே தகவலின்படி, கடந்த 2005-ஆம் ஆண்டுமுதல் கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை வரையிலான காலகட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 51,802 என்று அறிய முடிகிறது.

அவற்றுள் மேற்கு ரயில்வே மண்டலத்தில் 22,481 மரணங்களும், மத்திய ரயில்வே மண்டலத்தில் 29,321 மரணங்களும் நிகழ்ந்துள்ளன. கல்யாண், தாணே, வசயி, போரீவலீ ஆகிய பகுதிகளில் ரயில் விபத்துகளால் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு அதிகம்.

அவசர அவசரமாக ரயில்களில் ஏறுவது இறங்குவதால் கீழே தவறி விழுவது மற்றும் பிற காரணங்களால் ஓடும் ரயில்களிலிருந்து வெளியே விழுவது மற்றும் தண்டவாளங்களை அஜாக்கிரதையாக கடப்பது போன்ற செயல்களால் ஏற்படும் விபத்துகளே அதிகம். இதனால் அதிக உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

மும்பை புறநகர் பகுதிகளில் பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க காலை மற்றும் மாலையில் அலுவலக நேரங்களில் 3 நிமிட இடைவெளிக்கு ஒரு ரயில் என்கிற விகிதத்தில் ரயில் சேவைகள் இயக்கப்படுவதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். போதிய ஆம்புலன்ஸ் வாகன வசதிகளும் ஓரிரு ரயில் நிலையங்களை தவிர்த்து, அனைத்து ரயில் நிலையங்களிலும் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கூடுதல் தகவலாக, இன்றைய விபத்தைத் தொடர்ந்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக ரயில்வே இன்று தெரிவித்துள்ளது.

ரயில்வே பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்தாலும், பயணிகள் முழு ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே விபத்துகளை நிரந்தரமாக தடுக்க முடியுமென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →