ஆமதாபாத் விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று டாடா குழுமத் தலைவர் என். சந்திரசேகர் அறிவித்துள்ளார்.
மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரின் முழு மருத்துவச் செலவையும் டாடா குழுமமே ஏற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு இன்று பிற்பகல் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தில் விமானப் பணியாளர்கள் உள்பட 242 பேர் பயணித்த நிலையில், இதுவரை 200-க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒருவர் மட்டுமே காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, விமானம் மோதிய பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்த மாணவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 5 மாணவர்களும் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விமான விபத்து சம்பவத்தில் உயிரிழந்த அனைவருக்கும் தலா ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கவுள்ளதாக டாடா குழுமம் மற்றும் ஏர் இந்தியாவின் தலைவர் என். சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
மேலும், காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் மருத்துவச் செலவுகள் மற்றும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் டாடா குழுமம் செய்து தரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் விபத்தில் சேதமடைந்த பி.ஜே. கல்லூரிக்கு புதிய கட்டடமும் கட்டித் தரப்படும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.