முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் ஓர் கூமாபட்டி..! திடீர் இன்ஸ்டாகிராம் வைரலால் திக்குமுக்காடிய மலைக் கோட்டை!

மகாராஷ்டிரத்தின் மலை உச்சியில் உள்ள கோட்டைக்கு ஒரே நேரத்தில் கட்டுக்கடங்காத அளவில் குவிந்த சுற்றுலாப் பயணிகளைப் பற்றி...

Updated On : 27 ஜூன், 2025 at 2:02 PM
ஹரிஹர் மலை மீது ஏறும் சுற்றுலாப் பயணிகள்.
பகிர்:
Updated On : 27 ஜூன், 2025 at 1:32 PM

மகாராஷ்டிரத்தின் மலை உச்சியில் உள்ள கோட்டைக்கு ஒரே நேரத்தில் கட்டுக்கடங்காத அளவில் குவிந்த சுற்றுலாப் பயணிகளால், உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திடீர், திடீரென இணையத்தில் வைரலாகும் இடங்களுக்கு உடனே சென்று அதனை ‘இன்ஸ்டா ரீஸ்’ போட்டுவிட வேண்டும் என ஒரு கூட்டம் சுற்றிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வைரலான விருதுநகர் மாவட்டத்துக்கு அருகில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள சிறிய கிராமமான கூமாபட்டிக்குச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பியிருக்கிறது அதே இளைஞர் பட்டாளம்.

“தென் மாவட்டத்தில் கூமாபட்டி தனித்தீவு, ஊட்டி, கொடைக்கானல் போகத் தேவையில்லை, கூமாபட்டிக்கு வாங்க...” என கூமாபட்டி பற்றி இன்ஸ்டா பிரபலம் ஒருவர் பதிவிட்ட ரீல்ஸ் விடியோ இணையத்தில் வைரலானது. இதனால், பலரும் கூமாபட்டி நோக்கி படையெடுக்க, யாரும் இங்கு வர வேண்டாம் என அரசையே அலறவைத்துவிட்டனர்.

Advertisement

இதேபோல, மகாராஷ்டிர மாநிலத்தின் உயரமான மலை மீது அமைந்திருக்கிறது ஹரிஹர் கோட்டை. இந்தியாவிலேயே மிகவும் ஆபத்தான மலையேற்றப் பகுதியாக அறியப்படும் ஹரிஹர் கோட்டைக்கு சரியான படிகளெல்லாம் கிடையாது. மலையிலேயே படிகள் செதுக்கப்பட்டிருக்கின்றன.

தமிழகத்தில் இருக்கும் வெள்ளியங்கிரியைப் போன்றே இந்த மலையேற்ற விடியோவை, இணையதளவாசிகள் இன்ஸ்டா ரீல்ஸ்களில் வெளியிட தேனீக்கள் போல அந்த மலையை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளது அந்த இளைஞர் பட்டாளம்.

Updated On : 27 ஜூன், 2025 at 1:52 PM

அவ்வளவு ஆபத்தான மலையா?

ஹரிஹர் மலை சுமார் 3,676 அடி உயரமுடையது. 60-70 டிகிரியில் செங்குத்தாக மலைகளிலேயே படிகள் செதுக்கப்பட்டு இருக்கின்றன. மிகவும் குறுகலான பாதையில் ஒருவர்- ஒருவராக ஏறிச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. ‘விழுந்தால் எலும்புகூட மிஞ்சாது’ எனப் பதிவிடப்பட்டுள்ள கமெண்டுகளிலேயே தெரிகிறது இந்த மலையின் ஆபத்து.

இந்த மலையில் ஒரே நேரத்தில் 300 பேருக்கு மட்டுமே அனுமதி என்கிற நிலையில் ஆயிரக்கணக்கானோர் குவிந்திருப்பதால், கூட்டநெரிசலில் சிக்கித் தவறி விழும் பட்சத்தில் குறைந்தபட்சம் 100 பேர் பலியாவதற்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஆபத்தை உணராத அந்த இளைஞர் பட்டாளம் சாரை, சாரையாக அந்த மலைமீது ஏறி விடியோ வெளியிடுவதிலேயே மும்முரம் காட்டி வருகின்றனர்.

Updated On : 27 ஜூன், 2025 at 1:52 PM

இதுகுறித்து அங்கு சென்ற எக்ஸ் தளப் பயனர் ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில், “நாசிக்கில் உள்ள வனத்துறை கட்டுப்பாட்டில் அந்த மலை உள்ளது. மேலும் அங்கு செல்வதற்கு கட்டணமும் வசூலிக்கிறது.

ஒரு நாளைக்கு 300 பார்வையாளர்கள் செல்ல அனுமதி உள்ளது. ஆனால், வரம்பை மீறி இளைஞர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். நடவடிக்கை எடுக்கத் தவறிய அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மற்றொரு பயனரின் பதிவில், “சமீபத்தில் பாலியில் உள்ள கெலிங்கிங் கடற்கரைக்குச் சென்றிருந்தேன். ஹிட்டன் ஜெம் (மறைக்கப்பட்ட வைரங்கள் - யாருக்கும் பரீட்சையமில்லாத) கடற்கரை என்று சமூக வலைதளத்தில் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், அங்கும் கூட்டம் அலைமோதியது. நமது பாதுகாப்புக்கு அதிகாரிகள் எல்லா இடங்களிலும் தலையிட முடியாது.

மக்கள் தங்களது பொது அறிவைப் பயன்படுத்தி ஆபத்தான சூழ்நிலைகளைத் தாங்களாகவே தவிர்க்க வேண்டும். அரசாங்கம் ஒவ்வொரு ஆபத்தையும் பாதுகாக்கும் என்று எதிர்பார்ப்பது நமது முட்டாள்தனம்” எனப் பதிவிட்டுள்ளார்.

summary

Harihar Fort in Maharashtra is facing safety concerns due to large crowds navigating its steep, narrow stone steps. A viral video highlights the risk of a stampede, prompting questions about enforcement of visitor limits by the Forest Department, as the site becomes increasingly popular.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.