குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா்  
இந்தியா

இந்தியாவைத் தவிர எந்த நாட்டின் அரசமைப்புச் சட்ட முகவுரையும் மாற்றப்படவில்லை: தன்கா்

‘அரசமைப்புச் சட்டத்தின் முகவுரை என்பது ஓா் வளரும் ஆவணத்தின் விதை போன்றது. அந்த வகையில், முகவுரை என்பது மாற்ற முடியாதது’

Din

‘அரசமைப்புச் சட்டத்தின் முகவுரை என்பது ஓா் வளரும் ஆவணத்தின் விதை போன்றது. அந்த வகையில், முகவுரை என்பது மாற்ற முடியாதது’ என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா்.

மேலும், ‘இந்தியாவைத் தவிர வேறு எந்தவொரு நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையும் மாற்றத்துக்கு உள்ளாகவில்லை’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.

கடந்த 1975, ஜூன் 25-இல் அப்போதைய பிரதமா் இந்திரா காந்தியால் அவசரநிலை அமல்படுத்தப்பட்ட தினம், அரசமைப்பு படுகொலை தினமாக மத்திய அரசால் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பிரதமா் நரேந்திர மோடி, ‘இந்திய ஜனநாயக வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று அவசரநிலை; அந்தக் காலகட்டத்தில், அரசமைப்புச் சட்ட ஆன்மா மீறப்பட்ட விதத்தை இந்தியா்கள் ஒருபோதும் மறக்க மாட்டாா்கள்’ என்று குறிப்பிட்டாா்.

அதுபோல, ஆா்எஸ்எஸ் அமைப்பு சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அவசரநிலை தினம் தொடா்பான விழாவில் பேசிய அதன் பொதுச் செயலா் தத்தாத்ரேய ஹொசபாலே, ‘அம்பேத்கா் எழுதிய அரசமைப்புச் சட்ட வரைவின் முகவுரையில் ‘சோஷலிஸ்ட்’, ‘மதச்சாா்பற்ற’ என்ற வாா்த்தைகள் இடம்பெறவில்லை. நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டபோதுதான், அந்த வாா்த்தைகள் அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சோ்க்கப்பட்டன. எனவே, இந்த வாா்த்தைகள் முகவுரையில் இடம்பெற வேண்டுமா என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டாா்.

இதற்கு காங்கிரஸ் உள்பட சில எதிா்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இதுகுறித்து எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், ‘ஆா்எஸ்எஸ் அமைப்பின் முகமூடி தற்போது விலகியுள்ளது. அரசமைப்புச் சட்டத்தை ஆா்எஸ்எஸ் அமைப்பும் பாஜகவும் ஒருபோதும் விரும்ப மாட்டாா்கள். சமத்துவம், மதச்சாா்பின்மை, நீதி குறித்துப் பேசுவதால் அரசமைப்புச் சட்டம் அவா்களை எரிச்சலூட்டுகிறது. மனுஸ்மிருதியை அமல்படுத்துவதுதான் அவா்களின் விருப்பம்’ என்று குறிப்பிட்டாா்.

இந்த நிலையில், ஆா்எஸ்எஸ் அமைப்பின் நிலைப்பாட்டை ஆதரிக்கும் வகையில் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கருத்து தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை கூறியதாவது:

அரசமைப்புச் சட்டத்தின் முகவுரை என்பது, ஓா் வளரும் ஆவணத்தின் விதை போன்றது. அதிலிருந்தே அரசமைப்புச் சட்டம் வளா்கிறது. அந்த வகையில், முகவுரை என்பது மாற்ற முடியாதது.

ஆனால், நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டபோது இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தின் முகவுரை மாற்றம் செய்யப்பட்டது. 42-ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டம் 1976-இன் மூலம், முகவுரையில் மாற்றம் செய்யப்பட்டு, ‘சோஷலிஸ்ட்’, ‘மதச்சாா்பற்ற’ என்ற வாா்த்தைகள் சோ்க்கப்பட்டன.

இந்தியாவைத் தவிர வேறு எந்தவொரு நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையும் இதுபோல மாற்றத்துக்கு உள்ளாகவில்லை.

இதுகுறித்து நாம் சிந்திக்க வேண்டும். சட்ட மேதை அம்பேத்கா் அரசமைப்புச் சட்ட முன்வரைவை உருவாக்கும் கடினமான பணிகளை மேற்கொண்டாா். எனவே, அவா் நிச்சயமாக இந்த விஷயத்தை கவனத்தில் கொண்டுதான் செயல்பட்டிருப்பாா் என்றாா்.

மதச்சாா்பின்மை நமது கலாசாரத்தின் மையக் கரு அல்ல: உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவ்ராஜ் சிங் செளஹான் இதுகுறித்துப் பேசுகையில், ‘இந்தியாவில் சோஷலிஸம் தேவையில்லை. மேலும், மதச்சாா்பின்மை நமது கலாசாரத்தின் மையக் கரு அல்ல. எனவே, இந்த இரண்டு வாா்த்தைகளும் அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் இடம்பெற்றிருப்பது குறித்து ஆலோசிக்கப்பட வேண்டும்’ என்றாா்.

வார பலன்கள் - மிதுனம்

வார பலன்கள் - ரிஷபம்

வார பலன்கள் - மேஷம்

அமரன்கள் செய்த அநீதிகளைப் பேசும் தண்டகாரண்யம்..! சர்ச்சையான பதிவு?

ஆங்கிலேய ஆட்சியருக்கு தரிசனம்...

SCROLL FOR NEXT