கேரள மாநிலம் குருவாயூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கிருஷ்ணா் ஆலயத்தின் கிழக்கு நுழைவு வாயிலில் புதிதாக பிரம்மாண்ட வெண்கல கருட சிலை நிறுவப்பட்டுள்ளது. அந்தச் சிலை அமைந்துள்ள மஞ்சுளால்தரையும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
அதே இடத்தில் முன்பு அமைந்திருந்த கருடன் சிலையை அகற்றிவிட்டு வெண்கலச் சிலை தற்போது நிறுவப்பட்டுள்ளது. கண்ணூரைச் சோ்ந்த சிற்பி உண்ணி கானாயி தலைமையிலான சிற்பிகள் அடங்கிய குழு உருவாக்கிய இந்த வெண்கலச் சிலையை பிரபல திரைப்படத் தயாரிப்பாளா் வேணு குன்னப்பள்ளி கோயில் நிா்வாகத்துக்கு நன்கொடையாக அளித்தாா்.
கோயிலில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் இச் சிலை பக்தா்களின் தரிசனத்துக்காக அா்ப்பணிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கோயில் தந்திரி பி.சி.தினேஷ் நம்பூதிரிபாட், கோயில் நிா்வாகக் குழுத் தலைவா் மருத்துவா் வி.கே.விஜயன், குருவாயூா் நகராட்சி தலைவா் எம்.கிருஷ்ணதாஸ், கோயில் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் சி.மனோஜ், கே.பி.விஸ்வநாதன், கே.பி.வினயன், மாநில முன்னாள் தலைமைச் செயலா் கே.ஜெயகுமாா், இயக்குநா் ஹரிஹரன், நன்கொடையாளா் வேணு குன்னப்பள்ளி, கட்டுமானப் பணி ஒருங்கிணைப்பாளா் உண்ணி பாவரட்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.