நிலையான வளர்ச்சி இலக்கான (எஸ்டிஜி) 16 குறியீடுகளில், ஒன்பதில் பின்தங்கியிருக்கும் இந்தியா, உலகளவில், 167 நாடுகளில் 109வது இடத்தைப் பிடித்துள்ளது.
எனினும், இந்த நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டில் நாட்டின் சராசரியான 71-ஐ விடவும் அதிக புள்ளிகள் பெற்று தமிழ்நாடு, நமது நாட்டிலேயே இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. முதலிடத்தில் கேரளம் உள்ளது.
16 நிலையான வளர்ச்சி இலக்குகளில் (SDGs) ஒன்பதில் இந்தியா பின்தங்கியுள்ளது, உலகளாவிய சராசரியை விட பின்தங்கியிருக்கும் இந்தியா, ஒட்டுமொத்தமாக 167 நாடுகளில் 109 வது இடத்தைப்பிடித்திருப்பதாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் தெரிவித்துள்ளது.
மத்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பானது, மாநிலங்களோடு மாநிலங்களை ஒப்பிடும் வகையில், டப்ளின் பல்கலைக்கழகத்தின் நிலையான மேம்பாட்டு அறிக்கை, நிதி ஆயோக் வெளியிட்ட நிலையான வளர்ச்சி இலக்கு குறியீடு 2023 - 24, தேசிய மக்கள்தொகை ஆணையத்தின் 2011-2036 மக்கள்தொகை கணிப்புகள் குறித்த தொழில்நுட்பக் குழு அறிக்கை ஆகியவற்றை ஒப்பிட்டு, ஒரு கலவையான ஒப்பீட்டுத்தரவை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில், தமிழகம் 78 புள்ளிகளுடன் நாட்டிலேயே இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. ஒப்பீட்டளவில், முதலிடத்தில் இருக்கும் கேரளம் சிறிய மாநிலம் என்பதால், நாட்டில் மிக முக்கிய இடத்தை தமிழகம் பிடித்திருக்கிறது என்றே சொல்லலாம்.
சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் அம்சங்களை அடிப்படையாக வைத்து, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முன்னேற்றத்தை, நிதி ஆயோக்கின் நிலையான வளர்ச்சி இலக்கு குறியீடு மதிப்பிட்டுள்ளது.
இந்தியாவின் ஒட்டுமொத்த புள்ளிகள் 71 ஆக இருக்கும் நிலையில், தமிழகத்தின் குறியீடு 78 ஆக உள்ளது. கடந்த 2020 - 21ஆம் ஆண்டுக்கான நாட்டின் குறியீடு 66 ஆக இருந்த நிலையில், இது முன்னேற்றமாகக் கருதப்பட்டாலும், ஒட்டுமொத்தப் பட்டியலில் இந்தியா 109வது இடத்தையே பிடித்திருக்கிறது.
நிலையான வளர்ச்சி இலக்குகளில் 108 குறியீடுகளில் 19-ல் தமிழகம் பின்தங்கியிருக்கிறது. குறிப்பாக எஸ்டிஜி 5 (பாலின சமத்துவம்), எஸ்டிஜி 3 (ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு), எஸ்டிஜி 4 (தரமான கல்வி), மற்றும் எஸ்டிஜி 9 (தொழில், புத்தாக்கம், உள்கட்டமைப்பு) ஆகியவை தமிழகம் பின்தங்கியிருக்கும் ஒருசில குறியீடுகளாகும்.
எஸ்டிஜி 5 இல், தமிழகம் 50-64 புள்ளிகளைப் பெற்றுள்ளது, அதாவது, 1,000 ஆண்களுக்கு 929 பெண்கள் என்ற பாலின விகிதம் தேசிய தரவுடன் பொருந்துகிறது.
அதே வேளையில் எஸ்டிஜி 11 மற்றும் எஸ்டிஜி 15 ஆகியவை நகர்ப்புற சிக்கல்கள் மற்றும் பலவீனமான காடு வளர்ப்பு போன்றவற்றில் தேசிய சராசரியை விட தமிழகம் குறைவாகவே புள்ளிகளைப் பெற்றுள்ளது.
நாட்டில், பிகார் 57 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் கேரளம், உத்தரகண்ட் 79 புள்ளிகளுடன் முதலிடத்திலும் உள்ளன. தமிழகம் 78 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
கேரளத்தை எடுத்துக்கொண்டால் எஸ்டிஜி 3 (ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு)-ல் 82 புள்ளிகளையும், எஸ்டிஜி 4 (தரமான கல்வி)-ல் 80 புள்ளிகளையும் பெற்றுள்ளது. அதுபோல பிகார் எஸ்டிஜி - 1ல் வெறும் 34 புள்ளிகளையும் இரண்டில் 40 புள்ளிகளையும் மட்டுமே பெற்றுள்ளது.
தமிழகம் 78 புள்ளிகளைப் பெற்றிருக்கும் நிலையில், உத்தரப் பிரதேசம் 64 புள்ளிகளையும் குஜராத் 67 புள்ளிகளையும் பெற்றிருப்பதன் மூலம், இவை 30 - 43 சதவீத குறியீடுகளில் 50க்கும் குறைவான புள்ளிகளைப் பெற்றிருப்பது தெரிய வருகிறது.
அதுபோல, தமிழகம் தரமான குடிநீரிலும் (எஸ்டிஜி6), காற்று மாசுபாடு (எஸ்டிஜி 11) போன்றவற்றிலும் பின்தங்கியிருப்பதையும் காட்டுகிறது.
இந்தியா எஸ்டிஜி 5-ல் (பாலின சமத்துவம்) பலவீனமாக உள்ளது. இதன் கீழ் இருக்கும் எட்டு அளவீடுகளிலும் இந்தியா வீழ்ச்சியை சந்தித்துள்ளது. நாட்டில் இன்னமும் 1000 ஆண்களுக்கு 929 பெண்கள் என்ற விகிதமே நீடிக்கிறது. திருமணமான பெண்களில் 29.2 சதவீதம் பேர் குடும்ப வன்முறையை எதிர்கொள்கிறார்கள், 13.96 சதவீதம் பெண்கள்தான் சொந்தமாக சொத்து வைத்திருக்கிறார்கள் என்று காட்டுகிறது.
மேலும், பெண்களுக்கு எதிராக ஊதிய சமநிலையின்மை, வேலை செய்யும் இடங்களில் பாகுபாடு நிலவுகிறது என்பதும், 54 சதவீத பெண்களுக்குத்தான் சொந்தமான செல்போன் இருக்கிறது என்பதும், 74 சதவீத பெண்கள் மட்டுமே குடும்பக் கட்டுப்பாட்டு முடிவை எடுக்கிறார்கள் என்றும் இந்த குறியீடு சுட்டிக்காட்டுகிறது.
அதுமட்டுமல்லாமல், நாட்டின் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பாலின சமத்துவமின்மை நிலவுவதையும் குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.