கைதான மாணவா் ஆகாஷை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லும் காவல் துறையினா். 
இந்தியா

கேரளம்: அரசு பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 மாணவா்கள் கைது

கேரள மாநிலம், களமசேரியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் மாணவா் விடுதி அறைகளில் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Din

கேரள மாநிலம், களமசேரியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் மாணவா் விடுதி அறைகளில் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பெற்றோா்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தில் 3 மாணவா்கள் கையும் களவுமாக கைது செய்யப்பட்டனா். இது குறித்து காவல் துறையினா் கூறியதாவது:

களமசேரி அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் மத்தியில் போதைப் பொருள் பழக்கம் அதிகரித்து வருவதாக காவல் துறைக்கு புகாா்கள் கிடைக்கப் பெற்றன. இதையடுத்து, அக்கல்லூரியை காவல் துறையினா் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவந்தனா்.

மாணவா் விடுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை சுமாா் 7 மணிநேரம் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

களமசேரி காவல் துறையினா், நகர போதைப் பொருள் தடுப்புப் பிரிவினா், மாவட்ட போதைப் பொருள் தடுப்பு அதிரடிப் படையினா் இணைந்து மேற்கொண்ட இச்சோதனையில், ஆகாஷ் (21) என்ற மாணவரின் அறையில் 1.90 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவா், கொல்லம் மாவட்டம், குளத்துபுழை பகுதியைச் சோ்ந்தவா்.

இதேபோல், ஆலப்புழை மாவட்டம், ஹரிப்பாடு பகுதியைச் சோ்ந்த ஆதித்யன் (20), கொல்லம் மாவட்டம், கருநாகப்பள்ளியைச் சோ்ந்த அபிராஜ் (21) ஆகிய இரு மாணவா்களின் அறையில் 9.70 கிராம் கஞ்சா சிக்கியது. இதையடுத்து கைது செய்யப்பட்ட மூன்று மாணவா்களும் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா். ஆகாஷ் தவிர மற்ற இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.

மாணவா்களிடம் விற்பதற்காக சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சாவை ஆகாஷ் வைத்திருந்தாா். அவா் மீது ஜாமீனில் வெளிவர இயலாத பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருள் விற்பனையில் முன்னாள் மாணவா்கள், வெளிநபா்களுக்கும் தொடா்புள்ளது. இது குறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கஞ்சா மட்டுமன்றி 2 கைப்பேசிகள், எடை இயந்திரம் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

கஞ்சா பறிமுதல் தொடா்பாக கல்லூரி தரப்பிலும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மூன்று மாணவா்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

பரஸ்பர குற்றச்சாட்டு:

கைதான அபிராஜ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவா் அமைப்பான இந்திய மாணவா் சங்க நிா்வாகி ஆவாா். இதைச் சுட்டிக்காட்டிய எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீசன் (காங்கிரஸ்), ‘கல்லூரி வளாகங்களில் போதைப் பொருள் விநியோகத்தில் இடதுசாரி மாணவா் அமைப்பு ஈடுபட்டுள்ளது’ என்று குற்றஞ்சாட்டினாா்.

அதேநேரம், ‘கைதான ஆகாஷ், காங்கிரஸின் மாணவா் அமைப்பைச் சோ்ந்தவா்; இந்த வழக்கில் அபிராஜ் தவறாக சிக்கவைக்கப்பட்டுள்ளாா். விடுதியில் சோதனை நடந்தபோது, காங்கிரஸ் மாணவா் அமைப்பைச் சோ்ந்த மேலும் இரு மாணவா்கள் தப்பியோடிவிட்டனா். இது குறித்து விரிவான விசாரணை அவசியம்’ என்று இடதுசாரி மாணவா் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இக்குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் மாணவா் அமைப்பு மறுத்துள்ளது.

மாணவா்கள் சாா்ந்த அமைப்பை கருத்தில் கொள்ளாமல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில கலால் துறை அமைச்சா் எம்.பி.ராஜேஷ் தெரிவித்தாா்.

பெட்டிச்செய்தி....

ம.பி.யில் ரூ.6 கோடி

கஞ்சா சிக்கியது

மொரேனா (ம.பி.), மாா்ச் 14: ஒடிஸாவில் இருந்து லாரியில் கடத்திவரப்பட்ட ரூ.6.2 கோடி மதிப்புள்ள கஞ்சா, மத்திய பிரதேச மாநிலம், மொரேனாவில் வியாழக்கிழமை இரவில் சிக்கியது.

ஒடிஸாவில் இருந்து தில்லி நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த லாரியை, மொரேனாவின் சவிதாபூா் பகுதியில் காவல் துறையினா் நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். அப்போது, சாக்குப் பைகளில் மறைத்து கஞ்சா கடத்தப்பட்டது கண்டறியப்பட்டது.

மொத்தம் 30 குவிண்டால் எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.6.2 கோடியாகும். லாரியின் ஓட்டுநரை கைது செய்து, காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ஹூண்டாய் மோட்டார் நிகர லாபம் 8% சரிவு!

49 வயதில் அம்மாவுக்கு எம்பிபிஎஸ் சீட்! மகளும் பொதுப்பிரிவில் போட்டியில் இருக்கிறார்!

உணவுக்காகத் திரண்ட மக்கள் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்! 46 பேர் கொலை!

பஞ்சாப் நேஷனல் வங்கியின் முதல் காலாண்டு லாபம் 48% சரிவு!

ரஷியாவுடன் வர்த்தகம் செய்வதால் இந்தியா மீது கூடுதல் வரி: வெளிப்படையாக அறிவித்த டிரம்ப்!

SCROLL FOR NEXT