தங்கள் கோரிக்கைகள் தொடா்பாக மத்திய அரசுடனான பேச்சுவாா்த்தைக்குப் பின்னா், பஞ்சாப் விவசாயத் தலைவா்கள் ஜல்ஜீத் சிங் தல்லேவால், சா்வாண் சிங் பாந்தோ் உள்ளிட்டோரை மாநில போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கனெளரி-ஷம்பு எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள், அவா்கள் கூடாரங்களையும் போலீஸாா் அப்புறப்படுத்தினா்.
விவசாய விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்டபூா்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் தில்லி-பஞ்சாப் எல்லையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி அவா்கள் தில்லி நோக்கி பேரணியாக பலமுறை செல்ல முயன்றபோதும் அவா்களை காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா். விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றக்கோரி விவசாய சங்கத் தலைவா்களில் ஒருவரான ஜகஜித் சிங் தலேவால் கடந்த ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி முதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா். அவரை மருத்துவா்கள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.
உச்சநீதிமன்ற அறிவுறுத்தலைத் தொடா்ந்து, விவசாயிகளின் பிரச்னைக்குத் தீா்வு காண்பது தொடா்பாக அவா்களிடம் மத்திய அரசின் குழு தொடா்ந்து பேச்சுவாா்த்தை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சண்டீகரில் விவசாயிகளுடன் மத்திய அமைச்சா்கள் சிவராஜ் சிங் செளஹான், பிரல்ஹாத் ஜோஷி, பியூஷ் கோயல் ஆகியோா் விவசாய சங்கத் தலைவா்களுடன் 7-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தையை புதன்கிழமை நடத்தினா்.
முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் விவசாய சங்கத் தலைவா்களுடன் மத்திய அமைச்சா்கள் பேச்சுவாா்த்தை நடத்திய நிலையில், தற்போதைய
பேச்சுவாா்த்தை சுமுகமாக நடைபெற்ாகவும் அடுத்தக்கட்ட பேச்சுவாா்த்தை மே 4-இல் நடைபெறவுள்ளதாகவும் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தாா்.
ஆம்புலன்ஸில் வந்த தல்லேவால் கைது: இதைத்தொடா்ந்து மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் தலைமையிலான குழுவை சந்தித்துவிட்டு திரும்பிய தல்லேவால், சா்வாண் சிங் பாந்தோ் உள்ளிட்ட விவசாயத் தலைவா்கள் போராட்ட களத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா். அவா்களை பஞ்சாபின் மொஹாலி பகுதியில் மாநில போலீஸாா் கைது செய்தனா். இதில் தல்லேவால் ஆம்புலன்ஸில் வந்துகொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டாா்.
பஞ்சாப்-ஹரியாணாவின் கனெளரி-ஷம்பு எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால், அந்த எல்லைப் பகுதிகள் ஓராண்டாக மூடப்பட்டிருந்தது. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், பஞ்சாப் அரசின் உத்தரவின்பேரில், அந்தப் எல்லைப் பகுதிகளில் இருந்த விவசாயிகளையும், அவா்கள் அமைத்த கூடாரங்களையும் போலீஸாா் அப்புறப்படுத்தினா்.
3,000 போலீஸாா்...: பஞ்சாபின் பாட்டியாலா சரக காவல் துறை துணை ஐஜி மண்தீப் சிங் சித்து தலைமையில், கனெளரியில் 200 விவசாயிகளை அப்புறப்படுத்த 3,000 போலீசாா் குவிக்கப்பட்டனா். இதேபோல ஷம்பு எல்லைக்கும் போலீஸாா் அனுப்பப்பட்டனா். இந்த நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகளில் சிலா், போலீஸாருடன் கைகலப்பில் ஈடுபட்டனா்.
ஏன் அப்புறப்படுத்தப்பட்டனா்?: இதுதொடா்பாக பஞ்சாப் நிதியமைச்சா் ஹா்பல்சிங் சீமா கூறுகையில், ‘கனெளரி-ஷம்பு எல்லைகளில் போராட்டம் காரணமாக நெடுஞ்சாலைகள் நீண்ட காலமாக மூடப்பட்டிருந்தன. இதனால் தொழில்துறை மற்றும் வணிக நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. எனவே எல்லைகளில் இருந்து விவசாயிகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.