தில்லியில் உள்ள அக்பர் சாலையின் பெயர்ப் பலகைக்கு ஹிந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் கருப்பு மை பூசி, மன்னர் மகாராணா பிரதாப்பின் புகைப்படத்தை ஒட்டினர்.
ஐ.எஸ்.பி.டி. காஷ்மீர் கேட் பகுதியில் உள்ள மகாராணா பிரதாப்பின் சிலையை சிலர் சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டை முன்வைத்த ஹிந்து அமைப்பினர், பாபர், ஹுமாயூன் சாலைகளின் பெயர்ப் பலகைகளிலும் கருப்பு மை பூசுவோம் எனத் தெரிவித்தனர்.
அக்பர் சாலையின் பெயர்ப் பலகைக்கு கருப்பு மை பூசிய அமித் ரத்தோர் என்பவர் ஏ.என்.ஐ. செய்தியாளரிடம் பேசியதாவது:
“மன்னர் மகாராணா பிரதாப்பை அவமதிப்பதை இந்தியா ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது. ஐ.எஸ்.பி.டி. காஷ்மீர் கேட்டில் நடந்த சம்பவத்தை தில்லி அரசாங்கமும் காவல்துறையும் மூடி மறைக்கப் பார்க்கிறார்கள்.
குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உடனடியாக அவர்கள் மீது சட்டரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மேலும், அக்பர், பாபர் மற்றும் ஹுமாயூன் போன்ற படையெடுப்பாளர்களின் அடையாளப் பலகைகளை நாங்கள் தொடர்ந்து அகற்றுவோம். மேலும் அரசாங்கத்தின் கண்களைத் திறந்து ஒரு முடிவை எடுக்க முயற்சிக்கிறோம் என்று மற்றொருவர் தெரிவித்தார்.
பெயர்ப் பலகையை கருப்பு மை பூசி அளித்த அமித் ரத்தோர் என்பவர் இந்து ராஷ்டிர நவநிர்மாண் சேனையின் தேசிய தலைவர் என்பது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
முன்னதாக, சத்ரபதி சிவாஜியின் மகன் சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு வெளியான சாவா படத்தின் எதிரொலியாக அக்பர், ஹுமாயூன் சாலைகளின் பெயர்ப் பலகைள் அழிக்கப்பட்டு சாவா படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.