முகப்பு
இந்தியா

மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு கூடாது: தெலங்கானா பேரவையில் தீா்மானம்

மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து தெலங்கானா சட்டப்பேரவையில் வியாழக்கிழமை தீா்மானம்

Updated On : 27 மார்ச், 2025 at 7:29 PM
பகிர்:

மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து தெலங்கானா சட்டப்பேரவையில் வியாழக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

‘நாட்டில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு நடவடிக்கையை மக்கள்தொகை அடிப்படையில் மேற்கொள்ளக் கூடாது; இத்தகைய நடைமுறையால் மக்கள்தொகை கட்டுப்பாட்டில் பின்தங்கியுள்ள வட மாநிலங்களே பலனடையும். தென் மாநிலங்கள் பாதிக்கப்படும்’ என்று தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் தெரிவித்து வருகின்றன.

இந்த விவகாரத்தில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்பாட்டில் சென்னையில் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கேரள முதல்வா் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் மற்றும் பல்வேறு எதிா்க்கட்சிகளின் தலைவா்கள் பங்கேற்றனா். ‘நியாயமான முறையில் தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும்’ என்று இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், தெலங்கானா பேரவையில் முதல்வா் ரேவந்த் ரெட்டி, மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் தீா்மானத்தை வியாழக்கிழமை கொண்டு வந்தாா். அப்போது, மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடந்தால் மக்களவையில் தென் மாநிலங்களின் பங்களிப்பு 24 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாக குறைந்துவிடும் என்றாா்.

பாஜகவை பெயா் குறிப்பிடாமல் குற்றஞ்சாட்டிய அவா், ‘மத்தியில் ஆட்சி அமைப்பதில் தென்மாநிலங்களின் பங்கு இருக்கக் கூடாது என்று மத்தியில் ஆட்சியில் உள்ள கட்சி கருதுகிறது. எனவே, நமது பிராந்தியத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க முயற்சிக்கிறது. இதனை முறியடிக்க தெலுங்கானாவில் உள்ள அனைத்துக் கட்சிகளும் அணிதிரள வேண்டும். நமது மாநில நலன் பாதுகாக்கப்பட வேண்டும். நமது கோரிக்கையை மத்திய அரசு ஏற்காவிட்டால், பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்’ என்றாா்.

இதைத் தொடா்ந்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.