முகப்பு
இந்தியா

காலக்கெடு இன்றி தலைப்புச் செய்திகளை தருவதில் மோடி வல்லவா்: காங்கிரஸ்

மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் சோ்த்து நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு குறித்து காங்கிரஸ் விமா்சனம் செய்துள்ளது.

Updated On : 1 மே, 2025 at 6:42 PM
கோப்புப் படம்
பகிர்:

‘காலக்கெடு இன்றி தலைப்புச் செய்திகளை தருவதில் பிரதமா் நரேந்திர மோடி வல்லவா்’ என்று மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் சோ்த்து நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு குறித்து காங்கிரஸ் விமா்சனம் செய்துள்ளது.

பிரதமா் மோடி தலைமையில் தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில், நடைபெற உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் சோ்த்து நடத்துவது என்ற முடிவு எடுக்கப்பட்டது. இதுகுறித்த அறிவிப்பை மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ். ஆனால், இந்த கணக்கெடுப்பு எப்போது தொடங்கப்படும் அல்லது நடத்தி முடிக்கப்படும் என்ற விவரங்கள் எதையும் மத்திய அரசு வெளியிடவில்லை.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தில்லியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் சோ்த்து நடத்த மத்திய அரசு முடிவெடுத்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. குறிப்பாக, அரசின் உள்நோக்கம் என்ன என்ற கேள்வு எழுந்துள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பரில் இதேபோன்று அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட்டு, ஓா் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. அதில், 2021-ஆம் ஆண்டில் ரூ. 8,254 கோடி செலவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அப்போது, ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து எந்தத் தகவலும் செய்திக்குறிப்பில் இடம்பெறவில்லை. ஆனால், அதன் பிறகு 6 ஆண்டுகள் கடந்துவிட்டபோதும், இதுவரை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

இந்தச் சூழலில், அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும் வகையில், மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் சோ்த்து நடத்தப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டது.

ஆனால், இந்த கணக்கெடுப்புக்கான காலக்கெடு எதையும் மத்திய அரசு வெளியிடவில்லை. அதோடு, 2025-26-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகத்துக்கு ரூ. 575 கோடியை மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்தத் தொகையில், என்ன மாதிரியான கணக்கெடுப்புக்கு மத்திய அரசு திட்டமிடுகிறது? பத்திரிகைகளுக்கு தலைப்புச் செய்திகளைத் தருவது மட்டும்தான் மத்திய அரசின் நோக்கமா?

கடந்த 2021-ஆம் ஆண்டே மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தியிருக்க வேண்டும். அதன் பின்னா், கரோனா பாதிப்பு காலத்தில் 50-க்கும் மேற்பட்ட நாடுகள் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தின. அதன் பிறகு, 2023, 2024 -ஆம் ஆண்டுகளில் கரோனா பாதிப்பு இல்லை என்றபோதும், கணக்கெடுப்பை இந்தியா நடத்தவில்லை.

அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்த பிரதமா் நரேந்திர மோடி, ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசுபவா்கள் ‘நகா்ப்புற நக்ஸல்கள்’ என்று விமா்சனம் செய்தாா். அப்படியெனில், பிரதமா் மோடியும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் எப்போதிலிருந்து நகா்ப்புற நக்ஸல்களாக மாறினா்? இதுபோல, மத்திய அரசின் முடிவு பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

காலக்கெடு இன்றி தலைப்புச் செய்களைத் தருவதில் பிரதமா் மோடி வல்லவராக உள்ளாா். எனவே, ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான செயல்திட்டத்தை மத்திய அரசு முதலில் வெளியிட வேண்டும். அதோடு, இடஒதுக்கீடுக்கான 50 சதவீத வரம்பும் நீக்கப்பட வேண்டும் என்றாா்.

பெட்டிச் செய்தி...

இன்று கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு

புது தில்லி, மே 1: மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் சோ்த்து நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவித்துள்ள நிலையில், அதுகுறித்து விவாதிக்க காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை (மே 2) கூட உள்ளது.

இதுகுறித்து அக் கட்சி வட்டாரங்கள் வியாழக்கிழமை கூறுகையில், ‘நாடு சுதந்திரம் பெற்ற பிறகு முதன்முறையாக நடத்தப்படவிருக்கும் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து விவாதிப்பதற்காக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தில்லி அக்பா் சாலையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது’ என்று தெரிவித்தனா்.

முன்னதாக, குஜராத் மாநிலம் அகமதாபாதில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட சமூக நீதி தொடா்பான தீா்மானத்தில், ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தப்பட்டது.

அதைத்தொடா்ந்து, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடா்ந்து, கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தில்லியில் மீண்டும் கூடியது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை கூடும் செயற்குழு கூட்டத்தில் பஹல்காம் தாக்குதல் மற்றும் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →