அட்டாரி - வாகா எல்லை 
இந்தியா

பாகிஸ்தான் மீது ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று தடைகள்! இதனால் என்னவாகும்?

ஒரே நாளில் அடுத்தடுத்து தடைகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் பாகிஸ்தானுக்கு கடிதம் அனுப்பத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

பாகிஸ்தானிலிருந்து அனைத்துப் பொருள்களின் இறக்குமதிக்கும் தடை, பாகிஸ்தான் கொடியேந்திய கப்பல்கள் துறைமுகத்துக்குள் நுழைய தடை.. இந்தநிலையில், தற்போது அஞ்சல் மற்றும் பார்சல்களுக்குத் தடை விதித்து மத்திய அரசு அதிரடி காட்டியிருக்கிறது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் எதிரொலியாக அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுத்து வரும் மத்திய அரசு இன்று ஒரே நாளில் தொடர்ந்து தடை உத்தரவுகளாகப் பிறப்பித்து வருகிறது. அந்த வகையில், ஏற்கனவே இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியைப் பயன்படுத்தக் கூடாது, தூதரகங்களில் ஆள்குறைப்பு என்று அடுக்கடுக்கான நடவடிக்கைகள் தொடர்ந்தன.

இரு நாடுகளுக்கும் இடையே கடந்த காலங்களில் நிகழ்ந்த மிக மோசமான மூன்று போர்களின்போது கூட நிறுத்தப்படாத சிந்து நதிநீர்ப் பகிர்வு ஒப்பந்தம் இப்போது நிறுத்தப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்துவிட்டது கவனிக்கத்தக்கது. இதன்மூலம், பாகிஸ்தான் மீது இந்தியா மிகக் கடுமையான அதிருப்தியில் இருப்பதை நன்கு உணர முடிகிறது.

ஒருபக்கம் மத்திய அரசு தொடர்ந்து ஆலோசனைகளை மேற்கொண்டு வந்த நிலையில், இருநாட்டு எல்லையிலும் கடும் தாக்குதலும் தொடர்ந்து வந்தது. இந்த நிலையில்தான், இன்று காலை முதலே மத்திய அரசுத் துறைகள் ஒவ்வொன்றாக தடை உத்தரவுகளைப் பிறப்பிக்கத் தொடங்கின.

இறுதியாக, பாகிஸ்தானுடன் அனைத்து வகையான கடிதம் மற்றும் பார்சல் போக்குவரத்துக்கும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த தடை உத்தரவால், பாகிஸ்தானில் இருந்து அஞ்சல் பரிமாற்றம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வருவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பு, பாகிஸ்தானிலிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அனைத்துப் பொருள்களின் இறக்குமதிக்கும் தடை விதித்து மத்திய வணிகத் துறை அறிவித்திருந்தது. இதனால், பாகிஸ்தானிலிருந்து எந்தவிதமான பொருள்களும் நம் நாட்டுக்குள் நுழைய முடியாது.

பாகிஸ்தானிலிருந்து இந்தியா இறக்குமதி செய்வது பெரும்பாலும் மருந்துகளும் பழங்களும்தான். 2024 - 25ஆம் ஆண்டு ஏப்ரல் - ஜனவரியில், இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி 447.65 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், அந்நாட்டிலிருந்து இந்தியா இறக்குமதி செய்தது 0.42 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் இருந்தது. இனிமேல், இது முற்றிலும் நின்றுவிடும்.

தொடர்ந்து, பாகிஸ்தான் கொடியுடன் எந்தக் கப்பலும் இந்திய துறைமுகங்களுக்குள் அனுமதிக்கப்படாது, இந்தியக் கப்பல்களும் பாகிஸ்தான் துறைமுகங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று மத்திய கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் அறிவிப்பாணையை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

கப்பல்களுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்டிருக்கும் உத்தரவில் இந்திய சொத்துகள், சரக்குக் கப்பல்கள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட கட்டமைப்புகளின் பாதுகாப்புக் கருதியே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, அட்டாரி - வாகா தரைவழி எல்லைப் பாதை மற்றும் வான் எல்லை மூடப்பட்டது. கப்பலுக்குத் தடை விதிக்கப்பட்டதால் கடல் பரப்புக்கும் தடை வந்துவிட்டது.

இந்திய விமானங்கள் தங்களது வான்வெளியைப் பயன்படுத்த தடை என்று மிக அவசரப்பட்டு பாகிஸ்தான் பிறப்பித்த உத்தரவால் பல கோடி நஷ்டத்தை அந்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை சந்தித்து வரும் நிலையில், கப்பல் போக்குவரத்தும் தடை செய்யப்படுவதால் அந்நாடு பெரும் பொருளாதாரச் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம் என்றே கருதப்படுகிறது.

இதுபோல இன்று ஒரே நாளில் அடுத்தடுத்துத் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது உத்தரவாக இந்த அஞ்சல் போக்குவரத்துக்கான தடை உத்தரவு வந்துள்ளது.

இதன் மூலம் பாகிஸ்தானில் இருந்து வான்வழி மற்றும் தரைவழி மூலம் அனைத்து வகையான அஞ்சல்கள் மற்றும் பார்சல்களின் பரிமாற்றம் நிறுத்தப்படுவதாக மத்திய அரசின் அஞ்சல் துறை அதிரடியாக அறிவித்துள்ளது.

இந்த தடை உத்தரவுகளால், இந்தியா - பாகிஸ்தான் இடையே எவ்வித தொடர்பும் இல்லாமல் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பொருள்கள் மற்றும் அஞ்சல், பார்சல்களுக்கான தடை உத்தரவானது, பயங்கரவாதிகள் ஏதேனும் ரசாயனங்கள் அல்லது வெடிகுண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தக் கூடும் என்பதால் அவற்றை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கையாக எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகளாகவும் பார்க்கப்படுகிறது.

பொருள்கள், அஞ்சல்கள் என தற்போது பாகிஸ்தானிலிருந்து எதையும் இந்தியாவுக்குள் கொண்டுவர இயலாது என்பதால் பயங்கரவாதிகள் அல்லது பாகிஸ்தான் பாதுகாப்புப் படை ஏதேனும் வகையில் நம் நாட்டுக்குள் தாக்குதல் நடத்தவோ அல்லது பயங்கரவாதிகள் ஊடுருவுவதற்கோ வாய்ப்பும் தடைபடுகிறது.

இவை அனைத்தும் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளாக பார்க்கப்பட்டாலும், இந்தியாவின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுகை மாநகரில் 24 மணி நேரமும் மது விற்பனை

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை பவன் கேரா

அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தா் வேல்ராஜ் பணியிடைநீக்கம் ரத்து: ஆளுநா் உத்தரவு

ஜிஎஸ்டி 2.0: ஒரு மைல்கல் சீரமைப்பு

முகநூல் பக்கத்தில் பிரச்னையை தூண்டும் விதமாக விடியோ: 2 போ் கைது

SCROLL FOR NEXT