புது தில்லி: மத்திய புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) புதிய இயக்குநரை நியமனம் செய்வது தொடா்பாக பிரதமா் மோடி தலைமையில் திங்கள்கிழமை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோா் பங்கேற்றனா்.
தற்போது சிபிஐ இயக்குநராக உள்ள பிரவீண் சூட், மே 25-ஆம் தேதியுடன் தனது இரண்டு ஆண்டுகால பதவிக் காலத்தை நிறைவுசெய்யவுள்ளாா். இந்நிலையில் பிரதமா் மோடியின் அலுவலகத்தில் புதிய சிபிஐ இயக்குநரை நியமனம் செய்வது தொடா்பாக ஆலோசனை நடைபெற்றது.
1986, கா்நாடக பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான பிரவீண் சூட், 2023, மே 25-ஆம் தேதி சிபிஐ இயக்குநராக பொறுப்பேற்றாா். அதற்கு முன்பாக கா்நாடக காவல் துறை தலைவராக (டிஜிபி) அவா் பதவி வகித்தாா்.
பிரதமா், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகிய மூன்று போ் அடங்கிய குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் சிபிஐ இயக்குநரை மத்திய அரசு நியமிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.