புது தில்லி: பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை நாளைமுதல் போர் பயிற்சியில் ஈடுபடவுள்ளது.
இது குறித்து இந்திய விமானப்படை அதிகாரிகள் இன்று(மே 6) தெரிவித்திருப்பதாவது: நாளையிலிருந்து இந்தியா - பாகிஸ்தான் எல்லையையொட்டிய பலைவனப் பகுதிகளில் விமானப்படையின் போர் ஒத்திகை மற்றும் பயிற்சி நடைபெறும். இதில், ரஃபேல் போர் விமானம், மிராஜ் 2000, சுகோய்-30எஸ் உள்பட அனைத்து போர் விமானங்களும் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரிலுள்ள பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் ஏப். 22-ஆம் தேதி தாக்குதல் நடத்தினா்.
இந்த கொடூர பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளுமோ என்ற பதற்றம் நீடிக்கிறது. இந்தநிலையில், பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை நாளைமுதல் போர் பயிற்சியில் ஈடுபடவுள்ளதால் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதனிடையே, மே 7-ஆம் தேதி அனைத்து மாநிலங்களிலும் மக்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் ஒத்திகையில் ஈடுபட மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, எந்தவொரு தாக்குதலுக்கும் தயாராக இருக்க பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்துமாறு பாகிஸ்தானையொட்டிய எல்லையோர இந்திய மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
வான்வழித் தாக்குதல் நடந்தால் முன்கூட்டியே பொதுமக்களை எச்சரிக்கை செய்யும் விதமாக பொது இடங்களில் அபாய சைரன் ஒலியை ஒலிபெருக்கி மூலம் ஒலிக்கச்செய்தல்; அண்டை நாட்டில் இருந்து தாக்குதல் நடந்தால் பொதுமக்களை பாதுகாப்பது எப்படி என சிவில் பாதுகாப்பு அமைப்புகள், பொதுமக்கள், மாணவா்கள், தனியாா் நிறுவனங்களின் பாதுகாவலா்கள் மற்றும் ஊழியா்கள் உள்ளிட்டோருக்கு உரிய பயிற்சி அளித்தல்; தாக்குதலின் விளைவாக மின்சாரம், இணையதளம் ஆகியவை முழுமையாக முடங்கினால் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகியவை நாளைய ஒத்திகை நிகழ்ச்சியில் பயிற்சியளிக்கப்படும்.
இந்தநிலையில், பாகிஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ள கிராமங்களில் தாக்குதல் நடத்தப்பட்டால் அப்போது மக்கள் பாதுகாப்பை உறுதிசெய்துகொள்ள பழுதடைந்த நிலையிலுள்ள பதுங்குமிடங்களை சீரமைத்து தர அரசுக்கு அங்குள்ள மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.