எந்தவொரு நாடும் மத்தியஸ்தம் செய்வதை இந்தியா விரும்பவில்லை: மத்திய அரசு
பாகிஸ்தானுடன் பேச்சு நடத்திக் கொள்ள எந்தவொரு நாட்டின் உதவியும் தேவையில்லை...
புது தில்லி: பாகிஸ்தான் விவகாரத்தில் எந்தவொரு நாடும் மத்தியஸ்தம் செய்வதை இந்தியா விரும்பவில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் இன்று(மே 11) மாலை தெரிவித்துள்ளன.
பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பகுதிகள் குறித்தும் அந்தப் பகுதிகளை இந்தியாவிடம் திருப்பியளிப்பது குறித்தும் அந்நாட்டுடன் பேச்சு நடத்த வேண்டுமே தவிர வேறு விஷயங்கள் எதைப் பற்றியும் பாகிஸ்தானுடன் பேச வேண்டியதில்லை.
பயங்கரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்து பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு முன்வரலாம். இதில் வேறு எவரும் தலையிடுவதை விரும்பவில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
சிந்து நதி நீர் பாகிஸ்தானுக்கு நிறுத்தம் என்ற உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்குமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவத்தின் ’ஆபரேஷன் சிந்தூர்’ இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சண்டை நிறுத்தம் ஒப்பந்தத்தை மீறி மீண்டும் பாகிஸ்தான் தாக்குதல்களைத் தொடுத்தால் முழுவீச்சில் பதிலடி கொடுக்க இந்திய முப்படைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை நள்ளிரவு, அதாவது மே 6-7 இரவில் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் பாகிஸ்தானின் 9 இடங்களில் பல்வேறு பயங்கரவாதக் குழுக்களின் பயிற்சி முகாம்கள் ஏவுகணைத் தாக்குதலில் அழிக்கப்பட்டன. இந்தத் தாக்குதலில் பயங்கரவாதிகள் மட்டுமே குறிவைக்கப்பட்டதாகவும், பொதுமக்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் இந்தியா உறுதிப்படுத்தியிருந்தது.
எனினும், ஜம்மு-காஷ்மீா் எல்லையில் மோதலைத் தீவிரப்படுத்தி, மக்களின் குடியிருப்புகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.
இந்தியாவின் வடக்கு, மேற்கு மாநிலங்களில் உள்ள ராணுவ நிலைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை புதன்கிழமை இரவு, அதாவது, மே 7-8 இரவில் நடத்தியது. இந்தியாவின் வடக்கு, மேற்கு பகுதிகளில் ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத்தில் 15 நகரங்களில் உள்ள ராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது. பல ராணுவ இலக்குகளை ட்ரோன்கள், ஏவுகணைகளைப் பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்க முயன்றது.
இதனை இந்தியத் தரப்பு முறியடித்தது. ஒருங்கிணைந்த எதிா் தடுப்பு அமைப்பு(யுஏஎஸ் கிரிட்-ஆளில்லா வான்வழி கண்காணிப்பு), வான் பாதுகாப்பு அமைப்புகளால் இந்த தாக்குதல்கள் தடுக்கப்பட்டன.
பாகிஸ்தானுக்குப் பதிலடியாக அந்நாட்டின் பல இடங்களில் உள்ள ரேடாா்களையும், வான் பாதுகாப்பு அமைப்புகளையும் குறிவைத்து இந்தியா வியாழக்கிழமை(மே 8 ஆம் தேதி) காலைமுதல் தாக்கியது. அதில் அந்நாட்டின் மிகப்பெரிய மாகாணமான பஞ்சாப் தலைநகா் லாகூரில் உள்ள ஒரு வான் பாதுகாப்பு முற்றிலுமாகத் தகா்க்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள ராணுவ இலக்குகளை நோக்கி பாகிஸ்தான் படையினா் வியாழக்கிழமை இரவு தொடா் தாக்குதல் நடத்தினா். இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டது. ஜம்மு-காஷ்மீரின் சத்வாரி (ஜம்மு விமான நிலையம்), சம்பா, ஆா்.எஸ்.புரா, அா்னியா ஆகிய பகுதிகளை நோக்கி பாகிஸ்தானில் இருந்து வியாழக்கிழமை இரவு ஏவுப்பட்ட 8 ஏவுகணைகளை இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து சுட்டுவீழ்த்தின. அதேபோல் ஜம்மு, பதான்கோட், உதம்பூரை நோக்கி பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதலும் முறியடிக்கப்பட்டது.
இதனால் எல்லையோர மாநிலங்களில் பதற்றமான சூழல் நிலவியதைத் தொடர்ந்து, தங்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறும், ஒளிவிளக்குகளை அணைக்குமாறும் பொதுமக்களிடம் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனா். அந்த மாநிலங்களில் உஷாா் நிலை அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, அமெரிக்காவின் அழுத்தத்தால் பாகிஸ்தான் தரப்பிலிருந்து சண்டை நிறுத்தம் செய்து கொள்ள நேற்று (மே 10) இந்தியாவிடம் தொடர்பு கொண்டு பேசப்பட்டது. அதனைத்தொடர்ந்து, நேற்று மாலை 5 மணியிலிருந்து சண்டை நிறுத்தம் அமலானது.