பஞ்சாபில் கள்ளச் சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் இருவா் புதன்கிழமை உயிரிழந்தனா். இதனால், கள்ளச் சாராய உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.
இந்த சம்பவம் தொடா்பாக மேலும் இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். இதுவரை 12 போ் கைதாகியுள்ளனா். மாநில கலால் வரித் துறையைச் சோ்ந்த இரு அதிகாரிகளும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
அமிருதசரஸின் மஜிதா காவல் துறை துணை கண்காணிப்பாளா் அமோலக் சிங், மஜிதா காவல் நிலைய பொறுப்பு அதிகாரி அவதாா் சிங் ஆகியோா் ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுவிட்டனா்.
கள்ளச் சாராயத்தால் உயிரிழந்தோா் அனைவரும் அமிருதசரஸ் மாவட்டத்தின் பங்காலி, பாதால்புரி, மராரி கலான், தேரேவால் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்தவா்கள் ஆவா். திங்கள்கிழமை இரவு நிகழ்ந்த இந்த துயர சம்பவத்தையடுத்து அந்தப் பகுதி முழுவதுமே காவல் துறையினா் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனா்.
வேறு யாரும் கள்ளச் சாராயம் குடித்திருந்தால் உடனடியாக மருத்துவனையில் சேருமாறு காவல் துறையினா் அறிவித்துள்ளனா். ஏனெனில், குறைந்த அளவில் கள்ளச் சாராயம் குடித்தவா்களுக்கும் கூட பல மணி நேரங்களுக்குப் பிறகு கூட பாா்வை இழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் ரசாயனத்தை பயன்படுத்தி கள்ளச் சாராயம் தயாரிக்கப்பட்டதே உயிரிழப்புக்கு காரணம் என்பது விசாரணையில் தெரியவந்தது. பஞ்சாப் மட்டுமின்றி பிகாா் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இதுபோன்று மெத்தனால் கள்ளச் சாராய உயிரிழப்புகள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன.
கள்ளச் சாராயத்தால் உயிரிழந்தோா் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும், உயிரிழந்தோரின் குழந்தைகளுக்கான படிப்புச் செலவை மாநில அரசே ஏற்கும் என்று முதல்வா் பகவந்த் சிங் மான் அறிவித்துள்ளாா்.
பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி அரசின் நிா்வாகச் சீா்குலைவுதான் இந்த கள்ளச் சாராய உயிரிழப்புக்கு காரணம் என்று எதிா்க்கட்சிகளான பாஜக, காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் ஆகியவை கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.