இந்தியா

வங்கதேசத்தில் இருந்து இறக்குமதிக்கு இந்தியா கட்டுப்பாடு!

Din

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவில் ஆயத்த ஆடைகள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை நில சுங்கச்சாவடிகள் வாயிலாக இறக்குமதி செய்ய மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய வா்த்தக துறையின் கீழ் செயல்படும் வெளிநாட்டு வா்த்தக தலைமை இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) அண்மையில் வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:

இந்தியாவின் எந்தவொரு நில சுங்கச்சாவடிகள் வழியாகவும் வங்கதேசத்தில் இருந்து ஆயத்த ஆடைகள் இறக்குமதிக்கு அனுமதிக்கப்படாது. எனினும் மகாராஷ்டிரத்தில் உள்ள நஹாவா ஷேவா, மேற்கு வங்கத்தில் உள்ள கொல்கத்தா கடல் துறைமுகங்கள் வழியாக அந்த இறக்குமதி அனுமதிக்கப்படும்.

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு பழங்கள் மற்றும் பழச் சுவையூட்டப்பட்ட பானங்கள், பிற பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள், மர அறைகலன்கள் ஆகியவற்றை அஸ்ஸாம், மேகாலயம், திரிபுரா மற்றும் மிஸோரமின் எந்தவொரு நில சுங்க நிலையங்கள் மற்றும் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள், மேற்கு வங்கத்தில் உள்ள சங்ராபாங்கா மற்றும் ஃபுல்பாரியின் நில சுங்க நிலையங்கள் வழியாக இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படாது.

இதேபோல அந்த நில சுங்க நிலையங்கள் மற்றும் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் வழியாக வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு பருத்தி மற்றும் பருத்தி நூல் கழிவின் இறக்குமதிக்கும், சொந்த தொழில்களுக்காகப் பயன்படும் நிறமிகள், சாயங்கள், பிளாஸ்டிசைசா்கள் மற்றும் சிறு மணிகள் தவிர பிளாஸ்டிக் மற்றும் பிவிசி சரக்குகளின் இறக்குமதிக்கும் அனுமதியில்லை.

இந்தத் துறைமுக கட்டுப்பாடுகள் வங்கதேசத்தில் இருந்து மீன், திரவமாக்கப்பட்ட பெட்ரோலியம் எரிவாயு (எல்பிஜி), சமையல் எண்ணெய் மற்றும் ஜல்லி கற்கள் இறக்குமதிக்குப் பொருந்தாது. இந்தத் துறைமுக கட்டுப்பாடுகள் இந்தியா வழியாக நேபாளம், பூடானை தவிர, பிற நாடுகளுக்குச் செல்லும் வங்கதேச சரக்குகளுக்கும் பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் இருந்து நில சுங்கச்சாவடிகள் வழியாக வங்கதேசத்தில் பருத்தி நூல்களை இறக்குமதி செய்ய அந்நாடு அண்மையில் தடை விதித்தது. கடல் துறைமுகங்கள் வாயிலாக மட்டுமே அந்த நூல்களை இறக்குமதி செய்ய அந்நாடு அனுமதித்தது.

இதற்குப் பதிலடி அளிக்கும் விதமாக இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடிக்கும் புதிய படம்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை!

இன்பன் உதயநிதி வெளியிடும் தனுஷின் இட்லி கடை!

காவ காடே... தண்டகாரண்யம் படத்தின் பாடல் வெளியீடு!

ராமதாஸ் கெடுவுக்கு நாளை பதில் அளிக்கிறேன்: அன்புமணி

SCROLL FOR NEXT